பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

227

விளங்கிய அந்தப் பேருருவத்தைக் கண்டு வீமன் வியந்தான். தனக்கு முன் நிற்பவன் இராம பக்தனாகிய அனுமன் என்பது அப்போதுங்கூட அவனுக்குத் தெரியவில்லை. தைரியம் குறையாமல் தொடர்ந்து சங்கநாதமும் ஆரவாரமும் செய்தான் அவன். அனுமனுக்கு அளவற்ற சினம் உண்டாகிவிட்டது.

“அடே அற்பமனிதனே! தேவர்களும் அசுரர்களும் கூட இங்கே வரப் பயப்படுகிறார்கள்! திசைகள் எட்டையும் வெற்றி கொண்டு தனிப்பட்ட பெருமிதத்துடன் விளங்குகிறது இந்த வனம். துணிந்து இங்கே வந்தவன் நீ யாரடா?”

“நீ யார் என்பதை முதலிற் சொல் பின்பு அவசியமானால் நானும் சொல்கின்றேன்” -வீமன் திருப்பிக் கேட்டான். “அடே! இதோ உன் முன் விசுவரூபத்தைக் காட்டி நிற்கும் என்னைப் பார்த்தா நீ இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? உனக்கு எவ்வளவு திமிர்? தோள் வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? அல்லது வில்வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? ஏ, பேதையே? உன் துணிவிற்குச் சரியான பாடம் கற்பிக்கின்றேன். உன் துணிவு மெய்யானால் என் வாலைக் கடந்து சென்றுவிடு பார்க்கலாம்!”

“ஏ! அறிவற்ற குரங்கே! என்ன உளறுகிறாய், இந்த உலகத்திலேயே என்னால் கடக்க முடியாத வால் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது இராம பக்தியிற் சிறந்தவனும் எனக்கு அண்ணன் முறை உடையவனுமாகிய அனுமனின் வால்தான். அந்த வாலைத்தான் நான் பணிந்து வணங்குவதற்குக் கடமைப்பட்டவன். உன் போன்றவர்களின் வாலைக் கடப்பதற்கு மட்டும் என்ன? அழித்தொழிப்பதற்குக் கூட என்னால் முடியும்.” அனுமன் வீமனுடைய அறியாமையை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஆயினும் இறுதிவரை தான் யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமலே வீமனுக்குத் தன் மேலிருக்கும் பக்தியைச்