பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
21
 

அருள் நிறை அன்பும் நல்கும் பாத்திரம் கண்ணனே. பாரதகாவியத்தில் ஆடவர் என்னும் பிரிவிலடங்கும் பாத்திரங்கள் இங்கு மேலே விவரித்த இவ்வளவோடு அமையாமல் இன்னும் பலராக எண்ணற்றுப் பரந்து கிடக்கின்றனர். ஆனால் பாரத காவியத்தின் இன்றியமையாத ஆண் பாத்திரங்கள் என்ற முறையில் இங்கு மேலே விவரித்த சிலரே அமைகின்றனர்.

ஆகையால் அவர்களைப் பற்றிய செய்தியை இவ்வளவில் நிறுத்திவிட்டு இனி மேலே சில பெண் பாத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள முற்படுவோம். பாண்டவர்களின் தாய் குந்திதான் வரிசை முறைமையாலும் தகுதியாலும் பாரதத்தின் முதற்பெண் பாத்திரமாக இலங்குகின்றாள். பாண்டவர்கள் பிறப்பதற்கு முன்பும் பாண்டுவை மணந்து கொள்வதற்கு முன்பும் முனிவர்க்கும் பெரியோர்க்கும் தொண்டு செய்து கழித்த இவளுடைய கன்னிப் பருவம் கள்ளங்கபடமற்ற முறையில் தூயதாகத் தோற்றுகிறது. கதிரவன் அருளால் கர்ணன் பிறந்தபோது பயமும் குழப்பமும் அடைந்து, அவனைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விடும்போது இத்தகைய நிலைகளில் இயல்பாக ஓர் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மன நிலையையே குந்தியிடமும் காணமுடிகிறது. அரக்கு மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்று வேத்திரகீயத்தில் ‘ஐந்து புதல்வர்களோடு தனிமை வாழ்க்கை நடத்தும் போதும், பிற்காலத்தில் போர்க்களத்தில் கர்ணனைத் தனியே சந்தித்துத் தான் அவனுக்குத் தாய் எனவும், பாண்டவர்கள் அவனுக்குச் சகோதரர்கள் எனவும் கூறி அவனைப் பாண்டவர் பக்கம் சேருமாறு கேட்கும் போதும், குந்தியின் மாசு மறுவற்ற தாய்மையுணர்ச்சி தெளிவாக அமைந்து விளக்கம் பெறுகிறது. இக்காவியத்தில், குந்திக்கு அடுத்தபடியாக இங்கே குணவிளக்கம் பெறுவதற்கு உரியவள் பாஞ்சாலி. பல்வேறு நிலைகளிலும் அவ்வவற்றிற்கேற்பப் பாஞ்சாலியின் குணப்போக்குச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.