பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

233

முனிவர்களின் வேண்டுகோளைக் கேட்ட தருமன் வீமனை அழைத்து அவர்களுக்கு உதவி செய்து விட்டு வருமாறு பணித்தான். வீமன் வேட்டைக்குரிய படைக்கலங்களோடு முனிவர்களை அழைத்துக் கொண்டு சென்றான். வீமன் சென்ற சிறிது நேரத்தில் மற்ற இரு சகோதரர்களாகிய நகுல சகாதேவர்களும் மாலையுணவிற்குத் தேவையான காய்கனிகளைக் கொண்டு வருவதற்காகச் சென்று விட்டனர். தருமன் ஒரு மரத்தின் கீழ் எதோ சிந்தனையில் இலயித்துப் போய் வீற்றிருந்தான்.

திரெளபதி தனியே இருந்தாள். இந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள வந்தவனைப் போலச் சடாசுரன் என்ற அசுரன் ஒருவன் அங்கே வந்தான். அவன் ஆகாயத்தில் வேகமாகப் பறக்கிற ஆற்றல் படைத்தவன். திடீரென்று பாய்ந்து திரெளபதியைப் பலாத்காரமாகத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அவன் பறக்கத் தொடங்கினான். அந்த அரக்கனின் கொடிய கைகளில் சிக்குண்ட திரெளபதி பயந்து போய் அலறிக் கூச்சலிட்டாள். காடெல்லாம் எதிரொலித்த அந்தக் கூக்குரலின் ஒலியை நகுல், சகாதேவர்கள் கேட்டனர். குரல் திரெளபதியினுடையது என்று அறிந்து பதறி ஓடி வந்தனர். சடாசுரனை மேலே பறக்கவிடாமல் வழி மறித்துப் போரிட்டனர். அசுரன் தரையில் இறங்கித் திரெளபதியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நகுல சகாதேவர்களை எதிர்த்துப் போரிட்டான். போர் வெகுநேரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் முனிவர்களோடு சென்றிருந்த வீமன் அன்று வேட்டையாட முடிந்த மிருகங்களை வேட்டையாடி விட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் தொலைவில் வருகிறபோதே நகுல சகாதேவர்களும் சடாசுரனும் போரிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டுவிட்டான். நிலைமையை ஒருவாறு தானாகவே அனுமானித்துக் கொண்டு ஓங்கிய கதையும் கையுமாகச் சடாசுரனை நோக்கிப் பாய்ந்தான்.