பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

237

போலவே வீமனைத் தேடிக் கொண்டு தருமன், கடோற்கசனுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

தம்பியின் பேராற்றலால் குபேரனின் சேனாதிபதி இறந்து கிடப்பது கண்டு தருமன் மனம் வருந்தினான். “வீணாக ஒரு பெண்ணின் விருப்பத்தின் பொருட்டு அசட்டுத்தனமாகத் தேவர்களையெல்லாம் ஏன் பகைத்துக் கொள்கிறாய்?” என்று வீமனைக் கடிந்து கொண்டான்.

மணிமான் குபேரனுடைய சேனாதிபதி மட்டுமல்ல. குபேரனுக்கு ஆருயிர் நண்பனும் ஆவான். அவன் போரில் கொல்லப்பட்டான் என்ற செய்தி குபேரனுக்கு அறிவிக்கப் பட்டபோது அவன் வெகுண்டெழுந்தான். “இனியும் பொறுத்திருக்கமாட்டேன். என் ஆருயிர் நண்பனின் உயிரைப் பறித்துக் கொண்ட அந்த மனிதனைக் கொல்லாமல் திரும்பப் போவதில்லை” என்று வஞ்சினம் கூறியவாறு மலர் பொழிலுக்குப் புறப்பட்டு வந்தான் குபேரன். அவன் அவ்வாறு புறப்பட்டு வந்தபோது அவனுடைய மகன் உத்திரசேனன் சில காரணங்களைக் கூறித் தடுத்தான். அவன் ஏற்கனவே வீமனுக்கிருந்த வலிமையை நேரிற் கண்டு அறிந்தவன். ஆகையால் அவன் தடைக்குக் காரணமிருந்தது.

“அப்பா! இப்போது வந்திருக்கும் மானிடன் சாதாரணமானவன் அல்லன். முன்பு இந்திரர்களாக இருந்த ஐந்து பேர் சிவபெருமானுடைய திருவருளால் பாண்டவர்கள் என்ற பெயரில் மனிதர்களாகத் தோன்றியுள்ளனர், உலகில் நலம் பெருகச் செய்வது அவர்கள் கடமை. அவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன் இந்திரனால் வெல்ல முடியாதவர்களை எல்லாம் வென்று தேவர்கோனுடன் சரியாசனத்தில் அமரும் சிறப்பைப் பெற்றிருக்கிறான். மற்றொருவனாகிய வீமனே இங்கு வந்துள்ளான். இதே வீமன் முன்பொருமுறை இங்கு வந்து ஆயிரக்கணக்கான பொழிற் காவலர்களை அழித்தொழித்தது நாமறிந்த செய்தி அல்லவா? மனிதர்களாக இருந்தாலும் தேவர்களை விடச் சிறந்த ஆற்றல் பெற்றவர்கள் சிலர் உள்ளனர். அவர்களை நாம் அடக்கி ஒடுக்கிவிட