பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
238
அறத்தின் குரல்
 

முயல்வது தூணில் வலியச் சென்று முட்டிக் கொள்ளுவதைப் போல ஆகும். மகாவிஷ்ணு இராவணனைக் கொல்ல மனித உருவமே கொண்டிருந்தார். மகாபலியை அடக்குவதற்குக் கண்டோர் இகழும் குள்ளனாக வடிவம் கொண்டார். மனிதத் தோற்றத்தால் அந்தத் தோற்றத்திற்குள் பொருந்தியிருக்கும் வீரத்தைத் தாழ்வாக மதிக்கக் கூடாது. மேலும் மணிமான் இறந்ததற்கு வீமனுடைய கை வில் ஒன்று மட்டுமே காரணமல்ல. மணிமானுக்கு இருந்த சாபமும் ஒரு காரணமாகும். முனிவர் ஒருவருக்கு மணிமான் துன்பம் மளித்ததும் அதனால் சினம் கொண்ட அம்முனிவர், ‘தேவர்களுள் ஒருவனாகிய உனக்கு சாதாரண மனிதன் ஒருவனாலேயே சாவு ஏற்படும்’ என்று சாபம் அளித்ததும் உங்களுக்குத் தெரிந்த செய்திகள் தாமே? தந்தையே! மணிமான் இறந்தது பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். வீமனுடன் போர் செய்யும் எண்ணமும் வேண்டாம். அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்துச் சமாதானமாக அனுப்பி விடலாம். இவ்வாறு உத்திரசேனன் குபேரனுக்குக் கூறிய அறிவுரையை அவன் கேட்கவில்லை,

“உன் சொற்களை நான் கேட்கப் போவதில்லை. என் உயிருக்குயிரான நண்பன் மணிமானை எப்பொழுது கொன்றானோ அப்பொழுதே மணிமானைக் கொன்ற அந்த மானிடன் எனக்குக் கொடிய விரோதியாகி விட்டான். நான் அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்” என்று குபேரன் வீமனோடு போருக்குப் புறப்பட்டுவிட்டான். தன் முயற்சி பலிக்காமற் போனதனால் உத்திரசேனன் தன் தந்தையை அவன் போக்கிலேயே விட்டுவிட்டான். மலர் பொழிலின் வாயிலில் நின்று கொண்டிருந்த தருமன், வீமன், கடோற்கசன், ஆகிய மூவரும் தொலைவில் ஆரவாரத்தோடு எழுச்சி பெற்று வரும் குபேரனின் படைகளைக் கண்டனர். தருமனும் கடோற்க்சனும் திகைத்தனர். வீமனோ மறுபடியும் ஊக்கத்தோடு போருக்குத் தயாரானான்.

வெறுப்பும் சினமும் தவழத் தருமனுடைய விழிகள் அவனை நோக்கின. அந்த விழிகளின் கூரிய நோக்கைத் தாங்க