பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

239

முடியாமல் வீமன் தலை குனிந்தான். போருக்குச் செய்த யத்தனங்களையும் நிறுத்தினான். தருமன் தனக்குள் ஏதோ முடிவுக்கு வந்தவன் போலக் குபேரனுடைய படைகளுக்கு எதிரே சென்றான். ஆத்திரமும் மனக்கொதிப்புமாகக் கனல்கக்கும் விழிகளோடு வந்து கொண்டிருந்த குபேரனுக்கு முன் சென்று நின்று கொண்டு மலர்ந்த முகத்தோடு புன்முறுவல் செய்தவாறு அவனைக் கைகூப்பி வணங்கினான். குபேரன் ஒன்றும் புரியாமல் பதிலுக்கு வணங்கி விட்டுத் தயங்கி நின்றான்.

“குபேரா நீ சற்றே நின்று யான் கூறுவனவற்றைக் கேட்க வேண்டும். உன் சினம் தணிக. நீ அளகாபுரிக்குத் தலைவன். பேரரசன். பெருந்தன்மையுடையவன். என் தம்பி இளைஞன். அறியாதவன் ஏதோ தவறு செய்து விட்டான். மனத்தை வெறுப்புக் கொள்ளச் செய்யும்படியான செயல் ஏதும் நடந்துவிடவில்லை, நான் தருமன், என் மொழிகளை நீ மறுக்க மாட்டாய் என்று நம்புகிறேன். சிறியவனாகிய என் தம்பியை மன்னித்து இந்தப் போர் முயற்சியைக் கை விட்டுவிடு“ தருமன் உருக்கம் நிறைந்த குரலில் வேண்டிக் கொண்டான். குபேரனுக்கு மனம் இளகி விட்டது. உணர்ச்சி வசப்பட்டவனாகி அப்படியே தருமனை மார்புறத் தழுவிக் கொண்டான். போர் முயற்சியைக் கைவிட்டு விட்டு வீமனைத் தன் மனப்பூர்வமாக மன்னிப்பதற்கும் இணங்கிவிட்டான்.

தருமனும் வீமனும் குபேரனுடைய விருந்தினர் களாயினர். குபேரனின் அன்பின் மிகுதி அவர்களைக் களிப்பில் மூழ்கடித்தது. தான் சமீபத்தில் தேவர்கோன் தலைநகருக்குச் சென்றிருந்ததாகவும், அங்கே அர்ச்சுனன் நலமாக இருப்பதாகவும், அங்கே அவன் பெருமை பரவியிருப்பதாகவும், விரைவில் அவன் பாண்டவர்களைச் சந்திக்க மண்ணுலகிற்கு வருவான் என்றும் குபேரன் தருமனிடம் கூறினான். தருமன் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான். தருமன், வீமன், கடோற்கசன் ஆகிய மூவரும் குபேரனிடம் விடைபெற்றுக்