பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
243
 


“அம்மா ! திரெளபதி! துருவாசர் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்'’ என்று திரெளபதியை நோக்கிக் கூறினான். அவள் திகைத்தாள். எவருக்கும் எதுவும் புரியவில்லை. கண்ணன் உண்ட அந்த ஒரு சோற்றுப் பருக்கை துருவாசரது வயிற்றையும் அவர் கூட வந்தவர்கள் வயிறுகளையும் எப்படி நிறைத்திருக்கும் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. மாயனாகிய கண்ணன் அதன் சூக்ஷமத்தை அவர்களுக்கு விளக்கினான். அதே சமயத்தில் துருவாசர் முதலியவர்கள் நிறைந்த வயிறும் மலர்ந்த முகமுமாக அங்கே வந்து சேர்ந்தனர். எல்லாம் சர்வாந்தர் யாமியாகிய கண்ணபிரானின் திருவிளையாடல் என்பதை முனிவர் புரிந்து கொண்டார். அவர் கண்ணனை வணங்கிவிட்டுப் பாண்டவர்களை நோக்கிக் கூறினார்;

“நீங்கள் இட்ட விருந்து நன்றாக இருந்தது. வயிறு நிறைய உண்டோம். உங்கள் நல்லுள்ளத்தைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.” பாண்டவர்கள் அவரை வணங்கினர். துருவாசர் தாம் காட்டிற்கு வரநேர்ந்த உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டார்.

“நேற்றிரவு அத்தினாபுரியில் துரியோதனனுடைய அரண்மனைக்கு விருந்துண்ணப் போயிருந்தேன். அவன் அன்போடு உபசரித்து விருந்திட்டான். அவன் என்னிடம் காட்டிய பணிவும் அன்பும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. அது எதற்காக என்று இப்போது புரிந்து கொண்டேன். விருந்துண்டு முடிந்ததும் “உனக்கு வேண்டிய வரம் ஒன்றைக்கேள்!” என்று அவனிடம் கூறினேன். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் ஏனையோருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணக் கூடியவனாகிய அந்தப் பேதை உடனே, “முனிவரே! இன்று நீங்கள் என்னிடம் விருந்தினராக வந்தது. போலவே நாளை பாண்டவர்களிடம் போய் விருந்தினராக அமைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். ”அதனால் இங்கு உங்களைத் தேடி வந்தேன்.” முனிவர் தாம் வந்த காரணத்தைக் கூறி முடித்ததும் தருமன் அவரிடம் ஒரு வரம் வேண்டிக் கொண்டான்.