பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
250
அறத்தின் குரல்
 

பாண்டவர்களைக் கொன்று தொலைப்பதற்கு யாகம் செய்தே தீரவேண்டும் என்று முரண்டினார்கள். காளமா முனிவர் மறுப்பதற்கு வழியில்லாமல் இருதலைக் கொள்ளி எறும்புப் போல் திண்டாடினார். பாண்டவர்கள் மேலுள்ள அன்பு ‘வேள்வி செய்யாதே’ என்று தடுத்தது. துரியோதனாதியர்க்குக் கொடுத்த வாக்கு ‘வேள்வி செய்’ என்று வற்புறுத்தியது.

கடைசியில் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேள்வி செய்ய இணங்கினார். அந்தத் தீய வேள்விக்குரிய பொருள்களை எல்லாம் துரியோதனன் அவருக்குக் கொடுத்தான். கள்ளி மரங்களும் எட்டி மரங்களும் மற்றும் பல வாடிய மரங்களுமாகச் சூழ்ந்து நின்ற பயங்கரமானதோர் காட்டுப் பகுதியில் அந்தப் பயங்கரமான யாகத்தைச் செய்யத் தொடங்கினார் முனிவர். ஏராளமான பலிகளையும் பொருள்களையும் தீயிலே இட்டுத் துர்மந்திரங்களைக் கூறித் தொடர்ந்து வேள்வியைச் செய்தார். வானளாவி வளர்ந்த வேள்வியின் தீக்கொழுந்துகளில் இருந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாகத் தோற்றமுடைய ஒரு பெரும் பூதம் தோன்றியது. கோரமான கடைவாய்ப் பற்களும் குரூரமான செவ்விழிகளும் பாறை போன்ற செவிகளுமாகத் தோன்றிய அந்தப் பூதத்தைக் கண்டு காளமா முனிவருக்கே சதை ஆடியது. எலும்புக் குருத்துக்களுக்குள்ளே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல் இருந்தது.

“என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுக” என்று இடி முழக்கம் போன்ற குரலில் அண்டகடாட்சங்கள் எல்லாம் எதிரொலிக் கும்படியாகப் பூதம் முனிவரைக் கேட்டது.

“ஏ பூதமே! நீ போய்ப் பாண்டவர்கள் ஐவரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொன்று தொலைத்து விட்டு வா.”

“நல்லது முனிவரே! ஆனால் ஒரு நிபந்தனை. பாண்டவர்கள் கொல்வதற்கு அகப்படவில்லையாயின்