பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

253

எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு “இந்தக் குளத்திலுள்ள நீர் நச்சு நீர். இதைக் குடிக்க வேண்டாம்” -என்று குளக்கரை மணற்பரப்பில் எழுதினான். பின்பு நீரைக் குடித்து அவனும். மாண்டு வீழ்ந்தான். சகோதரர்கள் நான்கு பேரும் திரும்பி வராதது கண்டு தருமன் எழுந்து தள்ளாடித் தள்ளாடி நடந்தான். சிறிது தொலைவு நடந்ததும் சோர்வு மிகுதியாகவே ஒரு சந்தன மரத்தின் அடியில் உணர்வற்று மயங்கி வீழ்ந்து விட்டான். அவன் மயங்கி வீழ்ந்த அதே சமயத்தில் காளமா முனிவரால் அனுப்பப்பட்ட பூதம் அங்கு வந்தது. தருமன் மட்டும் தனியாக வீழ்ந்து கிடப்பதைக் கண்டது. முனிவர் ஐந்து பேரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொல்ல வேண்டும் என்று கூறியிருந்ததனால் மற்ற நான்கு பேரையும் தேடிச் சுற்றியது. நச்சுக் குளத்தின் கரையில் மற்றச் சகோதரர்கள் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதற்கு காளமா முனிவர் மேல் கடுங்கோபம் வந்துவிட்டது.

“கேவலம்! செத்துப் போனவர்களைக் கொல்வதற்காகவா என்னை அந்த முனிவன் அனுப்பினான். உடனே போய் அவனைக் கொல்கிறேன் பார்” -என்று வேகமாகத் திரும்பியது அது. காளமா முனிவர் பூதம் கோபாவேசமாகத் திரும்பி வருவதைக் கண்டு நடுநடுங்கி ஓட முயன்றார். பூதம் அவரை ஓட விடவில்லை. இறுக்கிப் பிடித்துக் கொண்டது. “ஏ! போலி முனிவனே! செத்தவர்களைக் கொல்லவா என்னை அனுப்பினாய்? நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்! உன்னை என்ன செய்கிறேன் பார் , இப்போது” -என்று கூறிக்கொண்டே அவரைத் திரிசூலாயுதத்தினால் கிழித்துக் கொன்று விட்டது. கொன்றபின் அருகிலிருந்த யாக குண்டத்தில் தீ வழியே தான் தோன்றியது போலவே புகுந்து மறைந்துவிட்டது.

காட்டில் சந்தன மரத்தடியில் மயங்கி விழுந்திருந்த தருமன் குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதனால் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். ஞானமந்திரத்தை உச்சரித்து உடலில்