பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
256
அறத்தின் குரல்
 

ஒருவனாவது இருக்கின்றேன். மாத்திரி வயிற்றில் தோன்றிய முறைக்கு இவன் இருக்கட்டும் என்றே இவனை எழுப்பினேன்!” என்று தருமன் எமனுக்கு மறுமொழி கூறினான். தருமனுடைய தன்னலமற்ற பெருந்தன்மை எமனை வியப்புக்குள்ளாக்கியது.

“மகனே! உன் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். இதோ உன்னுடைய மற்ற சகோதரர்களையும் உயிர்ப்பித்துத் தருகிறேன். எல்லோரும் நலமாக வாழுங்கள்” என்று கூறி மற்ற மூவரையும் உயிரோடு எழச் செய்தான் எமன். பின் பாண்டவர்களுக்குப் பயன்படும்படியான சில ஆயுதங்களையும், வரங்களையும் மந்திரங்களையும் கூறினான். துரியோதனனுடைய சூழ்ச்சியால் காளமா முனிவர் துர்வேள்வி செய்து பூதத்தை வருவித்து ஏவியதும், பூதம் அவரையே திரும்பிச் சென்று கொன்றதையும் முறையாக அவர்களுக்கு எடுத்துக் கூறினான். பாண்டவர்கள் யாவற்றையும் கேட்டு ஆச்சரியம் கொண்டார்கள்.

“சரி நான் வருகிறேன். நீங்கள் காட்டுக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இனிமேல் அஞ்ஞாதவாசத்தை மேற்கொள்ள வேண்டும் நீங்கள்“ -என்று கூறி எமன் விடைபெற்றுக் கொண்டு சென்றான். பாண்டவர்கள் நன்றி கூறி வணங்கி விடை கொடுத்தார்கள், எமன் தன் உலகத்திற்குச் சென்றான். செத்துப் பிழைத்த மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த மனத்தோடு பாண்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடிச் சென்றார்கள். அங்கே திரெளபதி நெடுநேரமாக அவர்களைக் காணாமல், “என்ன துன்பம் நேர்ந்து விட்டதோ?” -என்று கலங்கிப் பதறிக் கொண்டிருந்தாள். பாண்டவர்களைக் கண்களால் கண்டபோதுதான் அவளுடைய கலக்கமும் திகைப்பும் நீங்கின. பாண்டவர்கள் தமக்கு ஏற்பட்ட பெருந்துன்பங்களையும் நல்வினை வயத்தால் எமன் தங்களை அவற்றிலிருந்து காத்ததையும் திரெளபதிக்குக் கூறிய பின் அஞ்ஞாதவாசத்துக்குரிய ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

(ஆரணிய பருவம் முற்றும்)