பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


விராட பருவம்

1. மறைந்த வாழ்வு

‘பன்னிரண்டு வருட காலம் காட்டுவாசம் முடிந்து விட்டது. இனி எங்காவது ஒரு நகரத்தில் மறைந்து வாழ வேண்டும்’ -என்று எண்ணிய பாண்டவர்கள் அது பற்றித் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். சகோதரர்கள் பலரும் பலவாறு கூறினர். ஒவ்வொருவரும் அவரவருடைய விருப்பத்திற்கு ஏற்றதாக ஒரு நகரத்தைக் குறிப்பிட்டனர். அந்த நிலையில் எல்லோரும் ஒன்று கூடி மறைந்து வாழ்வதற்கேற்ற ஒரு நகரத்தை அர்ச்சுனன் குறிப்பிட்டான். அதுவே விராட மன்னனால் அரசாளப்பட்டு வந்த வளம் மிக்க விராட நகரம், சகோதரர்கள் ஐவரும் தாம் இன்னாரென்று தெரியாதபடி, மாறுவேடங்கொண்டு அந்த நகரத்து அரசனை அண்டி. வாழ்வதென்று தீர்மானமாயிற்று. வனத்தில் பாண்டவர்களுக்கு நட்பினராய் ஒன்று சேர்ந்திருந்த முனிவர்களும் சிற்றரசர்களும் பலர் இருந்தனர். தங்களோடு அவர்களும் வரநேர்ந்தால் அஞ்ஞாதவாசரகசியம் வெளியாகி விடுமோ என்று தயங்கினான் தருமன், எனவே அவர்களை அவரவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று வாழுமாறு கூறி ஏற்பாடு செய்து விட்டு அதன் பிறகே அவர்கள் விராட் நகருக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

விராட நகரத்தை கோநகரமாகக் கொண்டு ஆளப்பெற்று வந்த தேசத்திற்கு மச்சதேசம் என்று பெயர். பாண்டவர்கள் ஐவரும் மச்சதேச எல்லைக்குள் பிரவேசித்து விராட நகரத்தை அடைந்தனர். விராட மன்னனின் அரண்மனைக்குச் சென்று அவனைச் சந்திப்பதற்கு முன்னால் தங்கள் பொருள்களையும் ஆயுதங்களையும் ஒதுக்குப்புறமாக ஒளித்து வைப்பதற்கு ஒரு இடம் தேவையாயிருந்தது அவர்களுக்கு. நகரத்தின் எல்லைப் புறமாகப் பழங்காலத்துக்

அ.கு. -17