பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

அறத்தின் குரல்

காளி கோவில் ஒன்று இருந்தது. ‘போகிற போக்கில் அந்தக் காளி கோவிலுக்குள் போய் வணங்கி விட்டுப் போகலாம்’ -என்றெண்ணி உள்ளே சென்ற பாண்டவர்கள் தங்கள் பொருள்களை ஒளித்து வைப்பதற்கேற்ற ஒரு நல்ல இடத்தை அங்கே கண்டனர். காளி சந்நிதிக்கு முன்புறம் ஒரு வயதான வன்னிமரம் பருத்து வளர்ந்து செழித்துப் படர்ந்திருந்தது. அந்த மரத்தின் அடிப்புறம் அமைந்திருந்த பெரிய பொந்தில் எவ்வளவு பொருள்களை வேண்டுமானாலும் ஒளித்து வைக்கலாம் போலத் தோன்றியது. பாண்டவர்கள் தங்களுடைய ஆயுதங்களையும் பிற பொருள்களையும் அந்தப் பொந்திலே போட்டு ஒளித்து வைத்தார்கள். அப்பொருள்கள் யார்க்கும் புலப்படாமல் நலமாக அங்கிருக்க வேண்டும் என்று காளியை வேண்டி வணங்கிய பின் யார், யார் எந்தெந்த மாறு வேடத்தோடு விராடனின் அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்தனர்.

தாங்கள் ஐந்து பேரும் சகோதரர்கள் என்பது தெரியாதபடி தனித்தனியே வேறு வேறு தோற்றங்களுடன் வேறு முறையில் அரண்மனையில் நுழைவதே ஏற்றது என்று கருதினார்கள். முதன் முதலில் மாறு வேடங்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட வேண்டிய முறை தருமனுக்கு வாய்த்தது. தருமனுக்கு இயல்பான சாந்தகுணம் துறவியாகவே செல்லத் தூண்டியது. அவன் முற்றுந்துறந்த முனுபுங்கவனாக மாறி, கங்கன் என்ற பெயரைப் பூண்டு விராட மன்னனுக்கு முன் சென்று நின்றான். தவஒளி மிக்கவர் போலத் தோன்றியதால்விராட மன்னன் அவனை அன்போடு வரவேற்றான்.

“சுவாமி! தாங்கள் எவ்வூரிலிருந்து வருகிறீர்களோ? தங்கள் திருநாமம் யாதோ?”

“விராட மன்னவா? நின் கொற்றம் வாழ்க நலம் சிறப்பதாகுக! நான் நேற்று வரை பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனோடு வனத்தில் தங்கியிருந்தேன். என்னைக் ‘கங்க முனிவர்’ என்பார்கள்."