பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
259
 


“மிகவும் நல்லது முனிவரே! அடியேனுடைய நாடு தங்கள் வருகையால் பெரிதும் உயர்ந்து விட்டது. தேவரீர் இங்குவரத் திருவுளம் பற்றிய காரணத்தை அறியப் பெரிதும் ஆசைப்படுகிறேன்”

“காரணம் வேறொன்றம் இல்லை அரசே! திருவும் அறிவும் சிறந்து விளங்கும் உன் நாட்டில் உன்னோடு சில நாட்கள் தங்க வேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை.”

“முனி சிரேஷ்டரே! வலிய வந்தடைந்த பாக்கியத்தைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். விரும்பும் நாளெல்லாம் தங்கியிருங்கள். தங்களை விருந்தோம்பி மகிழும் இனிய பேறு எனக்குக் கிடைக்கும்” -தருமனுக்குத் திருப்தி ஏற்பட்டது. விராடன் நம்முடைய வேஷத்தைச் சரியானபடி நம்பிவிட்டான்! அஞ்சாத வாசத்திற்கு நல்ல இடம் கிடைத்து விட்டது. இனிக் கவலை இல்லை என்று களித்தது அவன் மனம்.

தருமனுக்கு அடுத்தபடி வீமன் சமையற்காரனாக மாறுவேடம் கொண்டு விராட்னைக் காணப் புறப்பட்டான். “என் பெயர் பலாயனன். சமையல் தொழிலில் எனக்கு நிகர் நானே. சுவை மிக்கவுணவு வகைகளை என் போலத் தேவருலகில் உள்ளவர்களாலும் படைக்க முடியாது. தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” -என்று விராடனுக்கு முன் வேண்டிக் கொண்டான்.

“ஏன் அப்பா? உன்னைப் பார்த்தால் மதமதவென்று வஞ்சகமில்லாமல் வளர்ந்து மல்யுத்தம் செய்கிற ஆள் மாதிரி இருக்கிறாயே? நீ சமையற்காரன் என்பதை எப்படி நம்புவது?” விராடனின் கேள்வி வீமனைத் தூக்கி வாரிப்போடச் செய்தது. எங்கே உண்மையை விராடன் கண்டு கொண்டு விட்டானோ என்றெண்ணி அவன் உடல் நடுங்கியது. நல்லவேளையாக உடனே துணிந்து சமாளித்துக் கொண்டு, “ஆம் அரசே! தங்கள் அனுமானம் முற்றிலும் முறையானதே. எனக்கு மல்யுத்தத்திலும் நல்ல பழக்கம் உண்டு. திறமாக