பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

25

உலகின் வேறெந்த மகாபாக்கியங்களும் இந்த ஒரேயொரு பாக்கியத்திற்கு ஈடாக முடியாது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இத்தகைய உறுதிப் பொருள்களை விளக்கி இவை பற்றிய உணர்வை உண்டாக்குவதுதான் ஒவ்வோர் சாதாரணமான காவியத்துக்கும் நோக்கம் என்றால் பாரதம், இராமாயணம் போன்ற பெரிய இதிகாச காவியங்கள் இந்த உணர்வை உண்டாக்கத் தவறிவிடப் போவதில்லை. பிற காவியங்கள் உறுதிப் பொருளுணர்வை எவ்வளவு உண்டாக்க முடியுமோ அவ்வளவிற்கும் ஒருபடி விஞ்சி நின்று பாரதம் முதலியவை அதே வகை உணர்வை உண்டாக்குமே ஒழியக் குன்றிப்போகமாட்டா. இதிகாச காவியங்களின் உயர்ந்த குறிக்கோளே இந்த உணர்வை ஒவ்வொருவருக்கும் உண்டாக்க வேண்டும் என்பதே ஆகும். ஒரு நாட்டு மக்கள் பொருள் துறையில் வளம் பெற வேண்டுமானால் விளைவு, தொழில் முதலியவற்றைப் பெருக்கி உழைப்பை வளர்த்தால் போதும். வெளியாருடன் இதயங்கலந்து பழகுவது போலப் பழகாமற் பழகுகின்ற நாகரிக வளம் பெற வேண்டுமானால் சாதாரணமான பொது அறிவு மட்டும் பெற்றால் போதும். ஆனால் உள்ளத்தின் பண்பாடு வளம் பெற வேண்டும் என்றாலோ காவியங்கள் வேண்டும், கவிதைகள் வேண்டும், அவைகளை உணர முற்படும் உள்ளங்கள் வேண்டும். உணரத் தயங்காத உணர்வுகள் வேண்டும். அற நூல்களும் நீதி நூல்களும் உண்டாக்குகின்ற இதயப் பண்பாட்டினும் விரைவாகப் பெருகிய அளவில் காவியங்களே இதயப் பண்பாட்டை வளர்ப்பதற்கு முடியும். இது அனுபவம் மலரச் செய்கின்ற பேருண்மை. ‘பொய் சொல்லாதே பொய் சொல்லாதே!’ என்று சிறு குழந்தைக்கு நூறு முறை வாய் உபதேசம் செய்யும் வறண்ட முறையைக் கைவிட்டு ஒரே ஒரு முறை அரிச்சந்திரன் கதையை உருக்கமான முறையில் உள்ளத்தில் பதியும்படியாகச் சொன்னால் ‘பொய் பேசல் தீது’ என்ற உணர்வை எளிமையான முறையில் அழுத்தமாக ஏற்படுத்திவிட முடியும். இது உறுதி. இந்த உணர்வுதான்