பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
269
 

ஒருவேளை அந்த ‘விரதசாரிணி'யை மனமகிழக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் நான் மீண்டும் பிழைத்தாலும் பிழைக்கலாம்” என்று சுதேஷ்ணைக்குச் சொல்லியனுப்பினான்.

கீசகன் அனுப்பிய ஆட்கள் ஓடோடிச் சென்று அவன் சாகக் கிடக்கிறான் என்றும் விரதசாரிணியை ஒரு முறை காணாவிட்டால் செத்தே போவான் என்றும் சுதேஷ்ணையிடம் கூறினர். ஆயிரம் தான் தவறாக நடந்து கொண்டாலும் உடன் பிறந்த பிறப்பல்லவா? இரத்தபாசம் ஒன்று இருக்கிறதே! கீசகன் இறந்துவிட்டால் சுதேஷ்ணைக்குப் பலவிதத்தில் நஷ்டம். விரதசாரிணியைக் காணாமல் போகின்ற அவன் உயிர் அவளைக் கண்டு அவளோடு பழக முயன்றாலும் போய்விடுமே! தேவர்களால் காவல் செய்யப்படும் அவள் கற்பு அவனைக் கொன்று விடுமே’ என்று கலங்கினாள் அவள். இறுதியில் எப்படியும் தன் சகோதரனாகிய கீசகனின் உயிரைக் காப்பாற்றியே தீருவதென்று விரதசாரிணியிடம் சென்றாள் சுதேஷ்ணை கீசகனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அவனுக்கு விரதசாரிணி வெறும் காட்சி மட்டும் அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்பது அவளுடைய கருத்து.

விரதசாரிணி மறுக்காத முறையில் அவளை அனுப்புவதற்காக ஒரு நல்ல பூமாலையை அவளிடம் கொண்டு போய்க் கொடுத்து, “விரதசாரிணி! நீ மிகவும் நல்ல பண்புடைய பெண் அல்லவா? இந்த ஒரே ஒரு முறை மட்டும் நான் சொல்வதை ஒப்புக் கொண்டு அதன்படி செய்து விடு. இந்தப் பூமாலையைக் கொண்டு போய் நான் கொடுக்கச் சொன்னதாகக் கீசகனைச் சந்தித்துக் கொடுத்து விட்டு வந்து விடு. கீசகன் என் உயிருக்கு உயிரான சகோதரன். அவனுக்குச்சாவு நேரிட்டு விட்டால் என்னால் பொறுக்கவே முடியாது. தயவு செய்து எனக்காக இதைச் செய்” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.