பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

அறத்தின் குரல்

என்று போலிச் சமாதானத்தைக் குறிப்பு மொழிகளால் கூறிவைத்தான். பலாயனன் இதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டு தன் சினத்தை அடக்கிப் பேசாமல் இருந்தான். வெட்கத்தால் உடல்கூசி நின்ற விரதசாரிணி துணிந்து விராட மன்னனை நோக்கித் தன் குறையை ஆத்திரத்தோடு கூறினாள். விராடன் திகைத்துப் போய் அவற்றைச் செவிமடுத்தான்.

“நியாயத்தையும், நேர்மையையும் காப்பாற்றக்கூடிய விராட மன்னனே! உன்னுடைய மைத்துனன் என்னை மிக இழிந்த முறையில் துன்புறுத்தும் இந்த நிலையைக் கண்டும் நீ மெளனமாக வீற்றிருக்கின்றாயே! உன் மனத்தில் இரக்கம் என்பது சிறிதேனும் இல்லையோ? உன் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாகப் பணி புரிகின்றவள் யான். என் பெயர் விரதசாரிணி. என் ஒழுக்கத்திற்கு இழுக்கு நேரப் பார்த்திருத்தல் உனக்குத் தகுமா? அரசின் நேரிய ஆணையையும் பாதுகாவலையும் அரசன் யாவர்க்கும் அளிக்கவில்லையானால் அவன் அரசு எங்ஙனம் நீண்டகாலம் வாழ முடியும்? இதை உணர வேண்டும் நீ.” விரதசாரிணி கூறிய இந்த ஆத்திரமொழிகள் கூட விராட மன்னனின் மெளனத்தைக் கலைக்கவில்லை.

இனியும் அவனது செவியில் வீண் வார்த்தைகளை வாரி இறைப்பதில் பயனில்லை என்றுணர்ந்த விரதசாரிணி துயரம் நிறைந்த மனத்துடன் அந்தப்புரத்திற்குச் சென்றாள். சுதேஷ்ணை கீசகனுக்கு உடன் பிறந்தவளானாலும் பெண் அல்லவா? ஒரு பெண்ணின் உள்ளத்தை உணரும் சக்தி இன்னொரு பெண்ணுக்கு இல்லாமலா போய்விடும்? சுதேஷ்ணையிடம் போய்த் தன் மனத்துன்பத்தை எல்லாம் அள்ளிக் கொட்டினாள் விரதசாரிணி.

வீமனையும் அடக்கித் தன் மனத்தையும் அடக்கி விட்ட தருமன் இறுதியில் பொதுவாக விருப்பு வெறுப்பின்றிக் கூறுகிறவனைப் போல விராட மன்னனை நோக்கி, “அரசே! கொடியவர்கள் எங்கிருந்தாலும் எவராக இருந்தாலும்