பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

273

அவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனுடைய கடமை. பெண்கள் பத்திரமாக இருப்பதைக் காட்டிலும் அவர்கள் கற்பு பத்திரமாக இருப்பதற்கு உழைப்பதே ஒரு அரசனுடைய சிறந்த கடமையாகும். அதுவும் உன் அந்தப்புரத்தில் உன்னுடைய கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக இருக்கும் ஒரு ஆதரவில்லாத பெண்ணை உன்னுடைய மைத்துனன் தீமைக்குள்ளாக்கும் போது நீ கண்டிக்காமல் இருப்பது சிறிதும் நல்லதன்று” என்று அறிவுரை கூறினான். ஒரு பெண்ணின் கதறலும் ஒரு முனிவரின் அறிவுரையும் அரியணையில் வீற்றிருந்த அந்த மன்னனின் மனத்தை இளகச் செய்தன. என்றாலும் கீசகனைப் பற்றிய பயம் ‘அவனைத் தண்டிக்கலாம்’ என்ற எண்ணத்தை எழவொட்டாமல் தடுத்தது.

எனவே ஒன்றும் மறுமொழி கூறத் தோன்றாமல் அவையிலிருந்து எழுந்து சென்றான் அவன். தருமனும் விவாதத்தை மேலே தொடர விடாமற் சென்றான். ஆனால் அங்கே சமையலறையில் ‘குபுகுபு’ வென்று பற்றி எரியும் அடுப்பைப் போலவே வீமனுடைய மனமும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ‘கீசகன்’ என்னும் பெயருக்குட்பட்ட மனிதனை அழித்து உருக்குலைத்து விட வேண்டும் என்று அவனுடைய இரத்த நாளங்கள் துறுதுறுப்பை அடைந்து கொண்டிருந்தன. எல்லோரும் தாம் வருந்தினார்கள். ஆனால் அது வெறும் வருத்தம் என்ற அளவில் நின்று விட்டது. வீமனுடைய வருத்தமோ, எல்லையைக் கடந்து செயலாற்றத் துணிந்த வருத்தம். சுதேஷ்ணை கூட உள்ளுர வருந்தினாள். “கீசகன் செய்வது தீமை, அதை எதிர்க்க அரண்மனையைச் சேர்ந்த யாவருமே பயப்படுகிறார்கள்” என்று விராடநகர் முழுவதும் இந்தச் செய்தி பரவியிருந்தது. கீசகன் செய்யும் தொல்லைகளிலிருந்து தப்பிக்க விரதசாரிணியாகிய திரெளபதிக்கு ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. ‘வீமன்’ உதவியை நாடுவது தான் அந்த வழி.

அ.கு. -13