பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
274
அறத்தின் குரல்
 


கீசகன் தன்னைத் துன்புறுத்திய சம்பவம் நடந்த அன்று இரவு எல்லோரும் உறங்கிய பின் திரெளபதி வீமனைச் சந்திப்பதற்காகச் சமையலறைப் பக்கம் சென்றாள். பகலில் நேர்ந்த நிகழ்ச்சிகளை எண்ணி வீமனும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். இரவில் திரெளபதி தன்னருகே வந்து நிற்பதைக் கண்டதும் அவன் எழுந்திருந்தான்.

“திரெளபதி! அவையிலேயே அந்தப் பயல் கீசகனைக் காலைக் கையை முறித்துப் போட்டிருப்பேன். அவ்வளவு கோபம் எனக்கு வந்தது. மாறுவேடத்தில் இருந்ததனாலும் அண்ணாவின் தடையினாலும் பொறுத்திருந்தேன்.”

“உங்கள் பொறுமைக்குக் காரணத்தை நானும் புரிந்து கொண்டேன். ஆனால் இனிமேலும் நீங்கள் அம்மாதிரிப் பொறுமையைக் கடைப்பிடித்தால் நான் என்னைக் கீசகனுக்குப் பறிகொடுக்க வேண்டியது தான். ஆகவே ஒரு திட்டம் செய்து கீசகனை யாரும் அறியாமல் ஒழித்துக் கட்ட முயல வேண்டும்.”

“என்ன திட்டம் செய்யலாம்? நீதான் ஒரு வழி சொல்லேன் திரெளபதி ! நான் எதற்கும் தயார்!”

“என்னைக் கந்தருவர்கள் காப்பதாகவும், என் கற்புக்குத் தீங்கு புரியும் எண்ணத்தோடு என்னைத் தொட முயல்கிறவர்கள் அக்கந்தருவர்களாலேயே உயிர் போக்கப்படுவார்கள் என்றும் இங்கு நான் யாரிடமும் கூறியுள்ளேன். இது நம்முடைய திட்டத்தை முடிக்க மிக அருமையாக வசதியளிக்கின்றது. கீசகன் கருத்துக்கு இணங்குவது போல் நடித்து அவனை ஒருநாள் இரவு தனியே அரண்மனைத் தோட்டத்திற்கு வரச் செய்கிறேன். நீங்கள் அங்கு மறைந்திருந்து அவனை அழிக்கும் விதமாக அழித்து விடுங்கள்.”

‘சரியான யோசனை திரெளபதி! அப்படியே ஏற்பாடு செய். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.” வீமன் சம்மதித்தான். திரெளபதி மனத் திருப்தியும் மகிழ்ச்சியும்