பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

அறத்தின் குரல்

நகரத்து அரண்மனையில் மறைவாக வாழ்ந்து வந்த பாண்டவர்களோ, ‘விரைவில் தங்கள் அஞ்ஞாதவாச காலம் முடிகிறது. பின் நிம்மதியாக நாடாளச் செல்லலாம்’ என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களது பகைவர்களாகிய துரியோதனாதியர்களால் அவர்களுக்கு ஒரு பெருஞ்சோதனை ஏற்பட்டுவிட்டது. அஞ்ஞாதவாச காலத்தில் பாண்டவர்கள் மறைந்து வாழும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டால் மீண்டும் பாண்டவர்கள் வனவாசம் செய்தே ஆக வேண்டும். அதற்காக எங்கிருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து விடுவது என்ற முயற்சியில் இறங்கி நான்கு திசைகளிலும் உளவு அறிவதற்கு ஆட்களை அனுப்பினர் துரியோதனாதியர்கள். உளவு அறிவதற்காகப் புறப்பட்ட ஒற்றர்கள் தம் தொழிலில் வல்லவர்களாயினும் பல காலம் சுற்றியும் கூடப் பாண்டவர்கள் மறைந்து வாழும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றமடைந்த ஒற்றர்கள் ‘ஒன்றும் தெரிய வில்லை’ என்று போய்த் துரியோதனாதியர்களிடம் கூறினர்.

உடனே துரியோதனன் பாண்டவர்கள் எங்கிருக்கக் கூடும் என்பதைத் தன் அவைப் பெரியோர்களுடன் கலந்து ஆலோசித்தான். “இன்னும் ஆயிரமாயிரம் ஒற்றர்களை நீ அனுப்பினாலும் பாண்டவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க உன்னால் முடியாது. அவர்கள் சத்தியவான்கள். அவர்கள் எந்த இடத்தில் மறைந்து வாழ்கின்றார்களோ அந்த இடம் பல வளங்களும் நிறைந்து செழிப்பாக இருக்கும். வேண்டுமானால் அந்தச் செழிப்பைக் காரணமாகக் கொண்டு அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கலாம்” என்றார் முதியவராகிய வீட்டுமர். இந்தச் சமயத்தில் ஒற்றன் தான் கேள்விப்பட்ட வேறோர் செய்தியையும் துரியோதனனிடம் கூறத் தொடங்கினான். அது உண்மையிலேயே இரகசியத்தை வெளிப்படுத்துவது போலிருந்தது.

“அரசே? இப்போதுதான் நாங்கள் கேள்வியுற்ற ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. சென்ற பல ஆண்டுகளை