பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

279

யெல்லாம்விட, விராடநகரம் இந்த ஆண்டு அதிக வளத்தோடு விளங்குகின்றது. தவிரவன்மை வாய்ந்தவர்களான கீசகனையும் அவன் தம்பிமார்களையும் யாரோ ஒரு பலசாலி அந்த நாட்டில் ஒரே சமயத்தில் யமனுலகுக்கு அனுப்பியிருக்கின்றான். அத்தகைய பலசாலிகள் வீமன், அருச்சுனன் ஆகிய இருவருக்குள் ஒருவராகத்தான் இருத்தல் வேண்டும்” என்றான் அந்த ஒற்றன்.

துரியோதனன், கர்ணன், சகுனி முதலியவர்கள் ஒற்றன் கூறிய செய்திகளை வைத்துக் கொண்டு தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர். “நாம் நம்முடைய வீரர்களை ஏவி, விராடராசனுக்குச் சொந்தமான பசுக்கூட்டங்களைத் திருடி வர ஏற்பாடு செய்வோம். பாண்டவர்கள் அங்கு இருப்பது உண்மையாயின் அப்போது எதிர்த்துப் போர் புரிய வருவார்கள், கண்டுபிடித்து விடலாம்” என்று யோசனை கூறினான் கர்ணன். மற்றவர்களும் இந்த யோசனையை ஒப்புக் கொண்டார்கள். திருட்டுத் தொழிலில் சதுரப்பாடும் சாமர்த்தியமும் மிக்கவனாகிய திரிகர்த்தன் என்பவனுடைய தலைமையில் படைகளை அனுப்பி விராடனின் நாட்டுத் தென் பகுதியிலுள்ள பசுக்களைத் திருடிக் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். திரிகர்த்தனும் படைவீரரும் அவ்வாறே ஓடிச்சென்று விராடராசனின் பசுக்களைத் திருடினர். பசுக்களைப் பறி கொடுத்த கோவலர்களும் பிறரும் ஓடோடிச் சென்று விராடனிடம் முறையிட்டனர். விராடன் திருடர்களை ஒழிப்பதற்காகப் படை திரட்டிக் கொண்டு சென்றான்.

அவனோடு மாறுவேடத்திலிருந்த பாண்டவர்களில் வீமன் முதலிய நால்வரும் கூடப் போருக்குச் சென்றிருந்தனர். அவர்கள், போர்த் திறமையினாலும் விராடராசன் படை வலிமையினாலும் பசுக்களைத் திருட வந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டும் திருடிய பசுக்களை விட்டுவிட்டும் ஓடினர். படையினர் யாவரும் தோற்று ஓடிப்போன பின்பும் கூடத் ‘திரிகர்த்தன்’ என்ற படைத்தலைவன் அனல் கக்கும்