பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
284
அறத்தின் குரல்
 

சிறிதும் சளைக்கவில்லை. நீண்ட நேரத்துப் போருக்குப் பின் பகைவர்களை ஓட ஓட விரட்டிப் பசுக்களை எல்லாம் மீட்டு உரியவர்களிடம் அளித்த பிறகே வில்லையும் அம்பையும் இயக்குவதை நிறுத்தினான். இதற்குள் அவன் உத்தரனிடம் கூறியிருந்த நான்கு நாழிகைகள் கழிந்து விட்டன. ஓடிப்போன பகைவர்கள் திரும்ப ஒன்று கூடி வரமுயன்று கொண்டிருந்தனர். அர்ச்சுனன் பேடியுருவம் நீங்கித் தன் சுய உருவுடன் நின்றான். உத்தரன் தன் நம்பிக்கை வீண் போகாமல் உண்மையாகியது கண்டு மகிழ்ந்து அர்ச்சுனனை வணங்கி நன்றி செலுத்தினான். முன்பு அக்னி தேவனால் அன்பளிப்பாக நல்கப்பட்ட அனுமக்கொடி பொருந்திய தேர் அர்ச்சுனனுக்கு முன் தோன்றியது. அர்ச்சுனன் வில்லும் கையுமாக அத்தேரில் ஏறிக் கொண்டான். பகைவர்கள் மீண்டும் திரும்பி வர முயன்று கொண்டிருந்த நிலையில் அர்ச்சுனனுடைய தேர் அவர்களை நோக்கிச் சென்றது. தேரில் பேடியின் ஸ்தானத்தில் அர்ச்சுனன் இருப்பதைக் கண்ட துரியோதனாதியர்கள் திடுக்கிட்டனர்.

அவன் அர்ச்சுனனாயின் அவனை அழித்து ஒழிக்காமல் விடுதல் கூடாதென்று கருதி மீண்டும் ஆவேசத்தோடு போருக்குப் புறப்பட்டார்கள். படையிழந்து வாகனமிழந்து வெறுங்கையனாய் நின்ற துரியோதனன் தன் படைகளை ஏவிவிட்டுத் தான் ஒரு தேரில் ஏறிப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு முன்பிருந்து நழுவி ஓடப் பார்த்தான். ஆனால் அர்ச்சுன்னா விடுகிறவன்? தன் தேரை ஓட்டித் துரியோதனன் தேர் ஓட முடியாதபடி தடுத்து நிறுத்தி விட்டுப் போருக்குத் தயாராக வில்லைக் கையில் எடுத்தான். துரியோதனனுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. மிரள மிரள விழித்துக் கொண்டே ஒன்றும் தோன்றாமல் தேரின் மேல் நின்றான் அவன். அவனைக் காப்பாற்றுவதற்காகக் கர்ணன், சகுனி முதலியவர்கள் அந்தத் தேரின் பக்கத்தில் வந்து நின்று கொண்டு அர்ச்சுனனை எதிர்த்துப் போர் புரியலானார்கள். “அர்ச்சுனா! உன்னுடைய வீரத்திற்குச் சரியான மாற்றானாக