பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

அறத்தின் குரல்

கொண்டான் அர்ச்சுனன். பறிக்க வேண்டியவற்றைப் பறித்துக் கொண்டு அர்ச்சுனனும் உத்தரனும் தேரில் ஏறிக் கொண்டதும் துரியோதனாதியர்கள் தப்பிப் பிழைத்தால் போதும் என்று எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். அப்போது தேரின் மேல் நின்று கொண்டே ஓடுகின்ற துரியோதனனின் முடியைக் குறிவைத்து ஒரு கூரிய அம்பைச் செலுத்தினான் அர்ச்சுனன். அந்த அம்பு துரியோதனனின் முடியைத் தாக்கி கீழே மண்ணில் விழுந்து புரளுமாறு உருட்டியது. தலையிலிருந்த முடி கீழே உருண்டதும் துரியோதனன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அர்ச்சுனனன் ‘கலகல'வென்று திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படியாக இகழ்ச்சிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“துரியோதனா! அன்றொரு நாள் எங்கள் மேலாடையை வலுவில் பறித்துக் கொண்டு எங்களைக் காட்டிற்கு அனுப்பினாய். நீ கீழே விழுந்து கிடக்கும்போதே அதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு உன் தலைமுடியைக் காலால் எற்றி விட வேண்டுமென்று எண்ணினேன். ‘விழுந்து கிடக்கும் போது முடியை ஏற்றுவது முறை அல்ல’ என்றெண்ணியே எழுந்திருந்து ஓடியதும் அம்பு எய்தேன். நினைவு வைத்துக் கொள்! பாண்டவர்கள் சக்தி, என்றும் உன்னையும் உன் அரசாட்சியையும் விடப் பெரியது” என்றான்.

ஆத்திரமடைந்த துரியோதனன், “வீட்டுமரே! நிபந்தனைப்படி இவர்கள் அஞ்ஞாதவாச காலத்திற்கு முன்னால் வெளி வந்தது பெரிய தவறு. அதனால் மீண்டும் இவர்கள் வனவாசத்திற்குப் போய்த் தீர வேண்டும்” என்று அடிப்பட்ட வேங்கை போல வீட்டுமரை நோக்கிக் கூறினான். இதைக் கேட்டு அர்ச்சுனன் இரைந்து சிரித்தான்.

“துரியோதனா! நீதான் அறிந்து கொள்ளாமல் மடத்தனமாகப் பிதற்றுகிறாய்! பாண்டவர்களின் அஞ்ஞாத வாசகாலம் நேற்றோடு முடிந்து விட்டது. நிபந்தனைப்படி அவர்கள் இன்று வெளிப்படுவது குற்றமில்லை. ஆகையால் அவர்கள் மறுமுறை வனவாசம் செய்ய வேண்டுவது