பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
292
அறத்தின் குரல்
 

நின்று கொண்டிருந்த கங்கரின் நெற்றியிலே இரத்தக் கறை கண்ட உத்தரன் மனம் பதறி “இது என்ன காயம்? எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டான். விராடன் நாணத்துடன் தலை குனிந்து நிகழ்ந்ததைக் கூறினான். உத்திரன் அதைக் கேட்டுப் பெரிதும் வருந்தித் தந்தையைக் கடிந்து கொண்டான்.

இதன் பிறகு தன் தந்தையை அழைத்துக் கொண்டு தாய் சுதேஷ்ணையைக் காண்பதற்குச் சென்றான். சுதேஷ்ணையின் அந்தப்புரத்தில் தாயும் தந்தையுமாக மகனை அன்புடன் அமர்த்தி உபசரித்து, “போர்க் களத்தில் எப்படி வென்றாயடா மகனே? நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் எங்களுக்குக் கூறு, கேட்பதற்கு ஆவலாக இருக்கின்றோம்” என்றனர். உத்தரகுமாரன் சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கிக் கூறலானான்:

“தாயே! தந்தையே! நீங்கள் எண்ணுவது போலப் போரில் வெற்றியைப் பெற்றவன் நான் இல்லை. படைகளைக் கண்டதுமே பயந்து ஓடிவந்துவிட முயன்றேன் நான். அப்போது பேடியாக மாறுவேடங்கொண்டு என்னுடன் இருந்த அர்ச்சுனன் நல்ல காலமாக என்னுடைய மானத்தையும் இந்த நகரத்தின் மானத்தையும் காப்பாற்றினான். இன்னொரு இரகசியம் பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியும் இந்த ஓராண்டு காலமாக நமது அரண்மனையிலேயே மறைந்து வசித்து வருகிறார்கள். இதை நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டோம். கங்கர்தாம் தருமர், பலாயனன் தான் வீமன், பேடியாக ஊர்வசியின் சாபத்தால் கிடைத்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு ‘பிருகந்நனை’ -என்ற பெயரோடு இங்கிருந்தவனே அர்ச்சுனன். தாமக்கிரந்தியாகவும், தந்திரி பாலனாகவும் இருந்தவர்களே நகுல சகாதேவர்கள். விரதசாரிணியே திரெளபதி. நாம் மகிழ்ந்து பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா இது? கூடிய விரைவில் அவர்கள் தங்கள் சுயரூபத்தோடு வெளிப்படுவார்கள். அப்பா! தருமருடைய