பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
295
 

நலமே நிகழும். இழந்த நாட்டை மீண்டும் பெற்று அரசாளுவோம்” என்றான் தருமன், உடனே விராடனின் புதல்வனான உத்தரன் விராடனைப் போலவே தானும் நன்றி கூறலானான்:

“இந்த விராடநகரம் என்றும் தங்களுக்குப் பணிபுரியக் காத்திருக்கின்றது. எங்கள் படைகள் எந்தச் சமயத்திலும் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றன. என் தங்கை உத்தரையை அருச்சுனன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.”

“உத்தரை வயதில் எனக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாதவள். அவள் சிறுமி. அவளை நான் மணம் செய்து கொள்வதற்கு இயலாது. ஒரு வேளை என் மகனுக்கு அவளை மணம் செய்து கொள்ள முடியலாம்” என்று திருமண வேண்டுகோளை அர்ச்சுனன் மறுத்து விட்டான். விராடனும் உத்தரனும் இதைக் கேட்டு முதலில் கொஞ்சம் வருத்தம் உற்றார்கள் என்றாலும் பின்பு மனத்தைத் தேற்றிக் கொண்டார்கள். தருமனின் வேண்டுகோளுக்கிணங்கப் ‘பாண்டவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் முடிந்து சுயமாக வெளிப்பட்டிருக்கிறார்கள்’ என்ற செய்தியை நாடு நகரங்களிலெல்லாம் பரப்பும்படி தூதர்களை அங்கங்கே அனுப்பினான் விராட மன்னன். செய்தியறிந்ததும், முன்பு தருமனை விட்டுப் பிரிந்து சென்ற சிற்றரசர்கள் அவனைச் சந்திப்பதற்காக வந்தார்கள், துவாரகையிலிருந்து கண்ணபிரான், சுபத்திரை, அபிமன்யு, சிவேதன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். போஜகுலராஜர்கள் சிலரும் வந்தனர். சிவேதன் விராடனுடைய மூத்தமகன். ஒரு போரிலே கண்ணனுக்கு உதவிபுரிவதற்காகச் சென்றிருந்தவன், இப்போது தான் திரும்பி வந்தான். எல்லோரும் மனம் ஒப்பியபடி அர்ச்சுனனுடைய புதல்வனாகிய அபிமன்யு விராடன் மகளாகிய உத்தரையை மணம் புரிந்து கொண்டான். அர்ச்சுனன் எடுத்து வந்தன போக எஞ்சிய ஆயுதங்கள் காளிகோவில் வன்னிமரப் பொந்திலேயே இருந்ததனால்