பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


உத்தியோக பருவம்

1. உலூகன் போகின்றான்

வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்துக் கொண்ட பாண்டவர்களும், கண்ணன் முதலியவர்களும் மேலே நிகழ வேண்டிய பவற்றினைப் பற்றிக் கூடிச் சிந்தித்தனர். போர் செய்து அதில் துரியோதனாதியர்களை வென்று அரசாட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்று வீமனும் அர்ச்சுனனும் கருதினர்.

“போர் செய்து அவர்களை வெல்லுவது தவறில்லை, ஆனால் போருக்கு அவசியம் இருக்கிறதா என்பதை நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள். சூதாட்டத்தினால்தான் நாட்டைப் பறிகொடுத்தீர்கள். சூதாட்டத்தினாலேயே மீட்க முயல்வது தானே முறை! எதற்கும் துரியோதனனிடம் தூது அனுப்பி அவன் எதை விரும்புகிறான்? என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது” என்றான் கண்ணன். கண்ணனுடன் வந்திருந்த பலராமன் அடுத்துக் கூறிய யோசனை அங்கிருந்தவர்களுடைய மனத்தைப் புண்படுத்தியது.

“பாண்டவர்களே! இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் மீண்டும் நாடாள நினைப்பது வீண் பேராசை. துரியோதனாதியர் உங்களிடமிருந்து பறித்துக் கொண்ட நாட்டைப் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து உரிமை கொண்டாடி விட்டனர். ‘இனி அவர்களிடமிருந்து அதைப் பெறலாம்’ என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்” -பலராமன் இவ்வாறு கூறவும் அங்கிருந்த சாத்தகி என்பவன் அடக்க முடியாத சினங்கொண்டான்.

“ஏ! பலராமா, உனக்கு எப்போதுமே நல்லதை எண்ணவும் தெரியாது, நல்லதைச் சொல்லவும் தெரியாது” என்று சாத்தகியும் மற்றும் சிலரும் ஆத்திரத்தோடு கூறினர். பலராமனுடைய பேச்சு அங்கு ஒரு பெருங்குழப்பதையும்