பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

301

நீ! நாளைக் குருட்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேர் ஓட்டப் போவது யார் தெரியுமா? கண்ணன் தேரோட்டம் போகிறான். பயங்கொள்ளியாகிய உத்தரகுமாரன் தேரோட்டும் போதே அவனை வெல்ல முடியாத நீ, இனி மேலா வெல்லப் போகிறாய்? கர்ணா! உன் வீரத்தின் அளவு இது தான் என்று நன்றாக அளந்து வைத்திருக்கிறேன் நான்.” வீட்டுமருக்குப் பதில் கூற வாய் இன்றி வெட்கமுற்றுத் தலை குனிந்து சிலை போல வீற்றிருந்தான் கர்ணன். அவையில் அசாதாரணமான அமைதி நிலவியது.

உலூகன் எழுந்திருந்தான். துரியோதனனைப் பார்த்து, “நான் தூது வந்தவன். இங்கே கூறுகிற முடிவு எதுவோ, அதை அப்படியே அங்கே போய்க் கூறுவேன். இப்போது நான் இவ்விடத்து முடிவைத் தெரிந்து கொண்டு புறப்படலாமா?” என்றான்.

துரியோதனன் ஏளனந்தோன்றக் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். உலூகனை அலட்சியமாக நோக்கிக் கொண்டே “இத்தனை நாட்களாகப் பிறருக்கு உரிமையின்றி ஏகபோகமாக ஆண்டு விட்டோம். எங்களுக்கு உரியதான இதை விட மனமில்லை. பாண்டவர்கள் காட்டில் வசித்துப் பழக்கப்பட்டுவிட்டதனால் காட்டை வேண்டுமானால் ஆண்டு கொள்ளட்டும். நாட்டைக் கொடுக்க நாங்கள் தயாராயில்லை. இதுதான் எங்கள் முடிவு, போய்ச் சொல்!” என்று கூறினான். உலூகன் இதைக் கேட்டதும் வீட்டுமன், விதுரன் முதலியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுத் தருமனைச் சந்திக்கச் சென்றான்.

தருமன் முதலியவர்கள் அப்போது விராட நகரத்துக்கு அருகிலிருந்த உபலாவியம் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். உலூகன் அங்கு சென்று நடந்த நிகழ்ச்சிகளையும் துரியோதனனின் -முடிவையும் கூறினான். துரியோதனாதியர்களோடு போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் பாண்டவர்கள் தெரிந்து கொண்டனர்.