பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

303

தூதுவர்களை அனுப்பினான். பாண்டவர்கள் பக்கம் யார் சேர்ந்து விட்டாலும் ஒரே ஓர் ஆளை மட்டும் நிச்சயமாகச் சேரவிடக்கூடாதென்பது துரியோதனன் கருத்து. அந்த ஆள் தான் கண்ணன். என்ன தந்திரம் செய்தாவது கண்ணனைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று தானே துவாரகைக்குப் புறப்பட்டான். எல்லாவற்றையும் நிகழ்வதற்கு முன்பே அறிய வல்லவரான கண்ணபிரான் துரியோதனன் புறப்பட்ட உடனே, அவன் தன்னைப் பார்க்கவருவதை உணர்ந்து கொண்டான். “துரியோதனன் என்னைப் பார்க்க வருவான். வந்தால் என்னிடம் அனுமதி கேட்காமலே உள்ளே அனுப்பிவிடுங்கள்” என்று வாயிற் காவலர்களிடம் கூறிவிட்டு உள்ளே போய்த் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருந்தான்.

கண்கள் பொய் உறக்கத்தில் ஆழ்ந்து மூடியிருந்தன. துரியோதனன் வந்தான். காவற்காரர்கள் பேசாமல் அவனை உள்ளே அனுப்பிவிட்டார்கள். உள்ளே சென்ற துரியோதனன் கண்ணன் உறங்குவதை அறிந்து அவன் தலைப்பக்கமாகக் கிடந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டான். எழுந்திருந்ததும் தன் வேண்டுகோளைக் கூறலாம் என்பது அவன் எண்ணம். துரியோதனன் வந்தது, தன் தலைப் பக்கத்தில் உட்கார்ந்தது எல்லாம் அறிந்த கண்ணனின் விழிகள் அருச்சுனன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தினால் தொடர்ந்து மூடியிருந்தன. இங்கு இவ்வாறிருக்க, உலூகனால் கண்ணன் தன்னை அழைத்திருப்பதை அறிந்து கொண்ட அருச்சுனன் உடனே புறப்பட்டுத் துவாரகைக்கு வந்து சேர்ந்தான். காவலர்கள் கண்ணன் உள்ளே இருப்பதாகக் கூறி அவனையும் உள்ளே அனுப்பினார்கள். உள்ளே சென்றதும் உறங்கிக் கொண்டிருந்த கண்ணனின் கமலபாதங்களைத் தன் கரங்களால் தொட்டு வணங்கினான். கால்களில் அர்ச்சுனனின் கர ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அப்போது தான் திடுக்கிட்டுக் கண்விழிப்பவனைப் போலக் கண்களைத்