பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

அறத்தின் குரல்

அவனிருந்த இடத்திற்குச் சென்றான். பலராமனிடம் சென்ற துரியோதனன், “தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களும் போரில் என் பக்கம் உதவி புரிய வேண்டும்” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டபின் தன் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றான். துவாரகையிலிருந்து, ‘கண்ணனைத் தன் பக்கம் வசப்படுத்த முடியாது போயிற்றே’ என்ற ஏமாற்றத்தோடு புறப்பட்டிருந்த துரியோதனன் அத்தினாபுரியை அடைந்ததும் தந்தையைச் சந்தித்தான். நடந்ததைக் கூறினான். கண்ணில்லாதவனாகிய திருதராட்டிரன் தன் மக்களையும், சகுனி, கர்ணன் முதலியவர்களையும் ஒன்று கூட்டி ஒரு பெரிய சதியாலோசனைக்குத் திட்டமிட்டான். போரின்றியே பாண்டவர்களை மீண்டும் படுகுழியில் வீழ்த்துகின்ற திட்டம் அது. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஞானாசிரியனான ‘சஞ்சயன்’ என்ற முனிவன் அப்போது அத்தினாபுரத்தில் இருந்தான். நிலையாமையைப் போதித்து, ஆசைகளை உடனே கைவிடும் வண்ணம் உபதேசம் செய்வதில் அவன் வல்லவன். அவனுடைய உபதேசங்களைக் கேட்ட எவரும் உடனே அவற்றின்படி செய்யாமலிரார். அவ்வளவு சக்தி அவன் சொற்களுக்கு உண்டு. இந்த முனிவனைப் பாண்டவர்களிடம் அனுப்பிப் ‘போர் செய்து நாட்டை மீட்டு ஆள வேண்டும்’ என்ற அவர்கள் ஆசையை போக்கிவிட ஏற்பாடு செய்தான் திருதராட்டிரன். விருப்பு வெறுப்புற்றவனாகிய சஞ்சய முனிவன் முதலில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்கினான். பின்பு திருதராட்டிரனின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் பாண்டவர்கள் மனத்தைக் கலைக்க ஒப்புக்கொண்டு சென்றான். ஒரு காலத்தில் தங்களுக்குக் குலகுருவாகவும் ஞானாசிரியனாகவும் இருந்த முனிவன் தங்களைத் தேடிவரவே அவனை மரியாதையோடு வரவேற்றுப் போற்றினார்கள் பாண்டவர்கள்:

“இத்துணை ஆண்டுகளுக்குப் பின் எங்களைத் தேடி வரத் தூண்டிய கருணை யாதோ?” தருமன் கேட்டான்.