பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

அறத்தின் குரல்

இரத்த வெள்ளத்தில் மிதக்கும் தலைகளுக்கு நடுவே தவம் செய்கிறோம். துரியோதனாதியர்களின் உயிரைக் களவேள்வியில் பலியிடுகிறோம். இன்னும் லட்சோபலட்சம் உயிர்களைக் கொன்று குவிக்கின்றோம்.” இவ்வாறு வீமன் வெறி பிடித்தவன் போலத் தொடர்ந்து பேசினான்.

அருகிலிருந்த கண்ணனும் -தருமனும் அவனைச் சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு, “போர் செய்வதைத் தவிர வேறெதையும் நாங்கள் விரும்பவில்லை” என்று முடிவாகக் கூறி சஞ்சய் முனிவனுக்கு விடை கொடுத்து அனுப்பினர். சஞ்சயனும் அவன் உபதேசமும் தோல்வியடைந்து திரும்ப வேண்டியதாயிற்று. திரும்பச் சென்ற சஞ்சயன் திருதராட்டிர மன்னனிடம் போய்ப் பாண்டவர்கள் கூறிய பதிலைச் சொன்னான். திருதராட்டிரன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். போரின்றியே பாண்டவர்களை வெல்லக் கண்டவழி தோற்றுவிட்டது அல்லவா?

3. மாயவன் தூது

சஞ்சய முனிவன் சென்றபின் பாண்டவர்களும் கண்ணனும் தங்கள் நிலை பற்றி ஆராய்ந்தனர். “நம்முடைய எதிரியும் போருக்கு இணங்கி விட்டான். நாமும் போருக்குத் தயாராகி விட்டோம். வீணிற் பல உயிர்களைக் கொன்று போர்க்களம் புகுவதைவிடப் போரின்றியே நமக்குக் கிடைக்க வேண்டிய நாட்டை அடையமுடியுமானால் முயற்சி செய்யலாம்” என்றான் தருமன். திடீர் திடீரென்று முரணிப் பேசும் தருமனின் இயல்பு கண்ணனைக் கோபம் கொள்ளச் செய்தது.

“தருமா! அடிக்கடி திட்டத்தை மாற்றிப் பேசுவதில் பயனில்லை. முடிவாக உங்களுடைய தீர்மானம்தான் என்ன? போர் செய்து நாட்டைப் பெறப்போகிறீர்களா? அல்லது ஒன்றுமே செய்யாமல் மீண்டும் காட்டிற்குப் போகப் போகிறீர்களா?"