பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

அறத்தின் குரல்

தருமன் கண்ணனிடம் கூறினான். ஏற்கனவே சஞ்சயன் சொற்களால் சினமுற்றிருந்த வீமன் இப்போது இன்னும் ஆத்திரமடைந்தான்.

வீமன் கண்ணனை நோக்கிக் கூறலானான் : “சுவாமீ! எங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்திலெல்லாம் பெரிய துரதிர்ஷ்டம் எங்கள் அருகிலேயே இருக்கிறது. அதற்கு எங்கள் ‘அண்ணன்’ என்று பெயர். அன்று அந்தத் திவேந்தன் மன்றினிலே படாததெல்லாம் பட்டோம். நெஞ்சும் மனமும் கொதிக்கும் நியாயமற்ற துன்பங்களை மலை மலையாக அனுபவித்தோம். இன்றோ, இந்த மூத்தவரின் சொற்களுக்கு அஞ்சிப் பகை முடிக்கவும் தயங்குகிறோம். நானும் அருச்சுனனும் திரெளபதியும் மனத்திற் சுமந்திருக்கும் ஆயிரமாயிரம் எண்ணக் குமுறல்களை இவர் ஒருவரே அழித்தொழித்துவிடுவார் போலிருக்கிறது.”

வீமன் கூறியதைக் கேட்ட தருமன், “வீமா ! பொறுமையிழந்து பேசாதே. கண்ணிலே தவறிப் போய்க் கைதீண்டிவிடுவது இயல்புதான். அதற்காகக் கண்ணையோ கையையோ அழித்து விடலாமா? உடன் பிறந்தவர்களுக்குள் சண்டை எதற்கு? அமைதியை வேண்டுவோம். இயலாவிட்டால் போரைச் செய்வோம்” என்று அவன் சினத்தை அடக்கினான்.

“அண்ணா ! உன் அறிவுரை போதும். கண்ணனைத் தூதனுப்பும் எண்ணத்தைக் கைவிடும். அவனுக்கு வேண்டாம் அந்தத் துன்பம். என்னைத் தூதனுப்புங்கள். நான் போகிறேன். போய் நாங்கள் அத்தனை பேரும் செய்த சபதங்களை நிறைவேற்றி விட்டு வருகிறேன். எல்லாவற்றையும் முடிக்காமல் திரும்ப மாட்டேன். நான் அங்கிருந்து திரும்பும்போது அத்தினாபுரத்தில் கெளரவர் குலப்பூண்டு எஞ்சியிருக்காது! என்ன சொல்கிறீர்கள் இப்போது? நான் புறப்படட்டுமா?”

“ஆத்திரப்படாதே! குற்றமோ, குறையோ மூத்தவர்கள் பேசுவதை ஒரேயடியாக இழித்துரைக்காதே. பொறுமையாக