பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அறத்தின் குரல்

அம்பிகை, அம்பாலிகை இருவரையும் அவர் வசம் ஒப்புவித்தாள் வியாசர் அருள் புரிந்தார் குருகுலக் கொழுந்து மூன்று தளிராகத் தழைத்து வளர்ந்தது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் என்று மூவரை வியாசரின் அருள் அளித்துச் சென்றது. திருதராட்டிரன் பிறவிக் குருடனாகவும் பாண்டு உடல் வெளுத்தவனாகவும் தோன்றியிருந்தனர், அறிவிலும் அழகிலும் சிறந்த புதல்வனாகத் தோன்றியவன் விதுரன் ஒருவனே! எவ்வாறானால் என்ன? ‘குரு குலக்கொடி வேரறுத்துப் போகவில்லை. தழைத்துப் படரத் தொடங்கி விட்டது - என்று திருப்தியுற்றனர் பரிமளகந்தியும் வீட்டுமனும்.

“காலம் வளர்ந்தது! வளர்ந்து வளர்ந்து பெருகியது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் மூவரும் கவின்பெற்று விளங்கும் மூன்று மலைச்சிகரங்கள் போலப் புகழ்பூத்து வளரலாயினர். வீட்டுமன் கண்ணை காக்கும் இமை போல அந்த மூன்று குலக் கொழுந்துகளையும் போற்றி வளர்த்து வந்தான். கல்வி, கேள்வி, படைப்பயிற்சிகளில் அவர்களைத் தேர்ச்சி பெற்று வலிமையடையச் செய்வதற்காகத் தானே அவர்களுக்கு ஆசிரியனாக அமைந்தான். குருகுலத்தின் எதிர்கால நலம், எதிர்காலச் சிறப்பு ஆகிய யாவையும் அந்த மூவரால் தான் நிலை பெற்று வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு தான் வீட்டுமன் அவர்களை இவ்வாறு உருவாக்கலானான். இந்த உணர்ச்சிதான் தளர்ச்சியே குறுக்கிடாமல் அவனுக்கு ஊக்கமளித்த உணர்ச்சி. தகுந்த பருவம் வந்ததும் மூத்தவனாகிய திருதராட்டிரனுக்கு முடி சூட்டினான் வீட்டுமன். பாண்டுவை அவனுக்குச் சேனாதி பதியாக நியமித்தான். கடைசித்தம்பியாகிய விதுரனை அவனுடைய அறிவாற்றல்களுக்கேற்ற அமைச்சுத் தொழிலுக்குரியவனாக நியமித்தான். இவ்வளவும் செய்து முடித்தபின், திருதராட்டிரனுக்குத் திருமணத்தையும் விரைவில் முடித்துவிட்டால் நல்லதென்று தோன்றியது வீட்டுமனுக்கு. காந்தார நாட்டு மன்னன் மகள் காந்தாரியை அவனுக்கேற்ற