பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. கண்ணன் திரும்பி வரல்

விதுரன் துரியோதனனைப் பழித்து வில்லை முறித்துப் போட்டுவிட்டுப் போன பின் அவையில் சிறிது நேரம் அசாதாரணமான ஒருவகை அமைதி நிலவியது. விதுரனைப் பகைத்துக் கொண்ட துரியோதனனின் அறியாமையை எண்ணி யாவரும் கலங்கினர். துரோணர், வீட்டுமன், முதலியவர்கள் துரியோதனன் மேல் அருவருப்புக் கொண்டனர். “உனக்கிருந்த ஒரே ஒரு நல்ல வலிமை வாய்ந்த துணையையும் நீ இழந்து விட்டாய். விற்போர் செய்வதிலும் ஏனைய கலைஞானங்களிலும் வல்லவனான விதுரனைப் பகைத்துக் கொண்ட போதே உன் தோல்வி உன்னை நெருங்கிவிட்டதென்பதை மறந்து விடாதே. பாண்டவர்கள் உன்னைச் சுலபமாக வெல்லும்படி நீயே செய்து கொண்டு விட்டான்” வீட்டுமன் மனக் கொதிப்போடு கூறினான்.

வீட்டுமன் இடித்துக் காட்டிப் பேசிய பேச்சு துரியோதனனுடைய ஆத்திரத்தைக் கிளறி விட்டுவிட்டது. “விதுரன் என்னை விட்டுவிலகியதனால் எனக்கு ஒரு குறைவும் வந்து விடவில்லை. விதுரனைக் காட்டிலும் சிறந்த முறையில் விற்போர் செய்ய வல்லவனான கர்ணன் என்னோடுதான் இருக்கிறான். துரோணரும் அசுவத்தாமனும் இருக்கிறார்கள். வயதிலும் அனுபவ அறிவிலும் மூத்தவராகிய நீங்கள் இருக்கிறீர்கள். இன்னும் நம்மைச் சேர்ந்த கோடிக்கணக்கான சிற்றரசர்கள் இருக்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள்! விதுரன் செய்தது தவறா இல்லையா? என் பகைவர்களிடமிருந்து தூதனாக வந்திருப்பவனை இவன் வரவேற்று உபசரித்து விருந்தளித்தது நியாயமா? எனக்கு நன்றி செய்ய மறந்து அந்த இடையனை உபசரித்து மகிழ்ந்த இவனை நான் தூற்றியது மட்டும் குற்றமாகிவிடுமா?” துரியோதனனின் இந்தப் பேச்சுக்கு வீட்டுமன் மறுமொழியே கூறவில்லை.