பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

323

அத்தினாபுரத்திலேயே தங்கியிருக்கும் குந்திதேவியைச் சந்தித்து, அவள் மூலம் அந்தரங்கமான சூழ்ச்சி ஒன்றை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

இதற்காகக் கண்ணன் விதுரனிடம் விடைபெற்றுக் கொண்டு குந்தியைச் சந்திக்கச் சென்றான். குந்தி அவனை அன்புடன் வரவேற்று, “வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தாள். “உன் புதல்வர்கள் சூதாடி இழந்த நாட்டை மீண்டும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தூது வந்தேன். தூது முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. கடைசியில் பாண்டவர்களோடு போர் செய்ய வேண்டிய நிலைக்குத் துரியோதனாதியர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். அது போகட்டும், தூது முயற்சிதான் தோற்றுவிட்டது. உன்னிடம் வந்த காரியமாவது வெற்றியாக முடிகிறதா பார்க்கிறேன்”.

“அப்படி நான் வெற்றிகரமாக நிறைவேற்றித் தரக் கூடிய காரியம் என்ன இருக்கிறது?”

“குந்தீ! அந்தக் காரியத்தைக் கூறுவதற்கு முன்னால் அதற்கு அவசியமான சில பழைய நிகழ்ச்சிகளை உனக்கு நினைவூட்ட வேண்டியவனாக இருக்கிறேன். அவை உன் மனத்தைப் புண்படுத்தக் கூடியனவாய் இருந்தால் என்னை மன்னித்து விடு. துருவாச முனிவர் அருளால் விரும்பிய தேவர்களைக் கூடி மகிழும் வரம் கன்னிப்பருவத்திலே உனக்குக் கிடைத்ததல்லவா? அப்போது நீ முதன் முதலாகக் கதிரவனை அழைத்து அவனோடு கூடி மகிழ்ந்தாய். அதன் பயனாகப் பிறந்த குழந்தையை ஊர்வம்புக்கு அஞ்சி ஒரு பெட்டியில் இட்டு ஆற்றில் மிதக்க விட்டுவிட்டாய். ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை அத்தினாபுரத்தில் தேர்ப்பாகன் சூதனும் அவன் மனைவியும் கண்டெடுத்து வளர்த்தனர். அதே சமயத்திலே திருதராட்டிரனுக்கத் துரியோதனாதியர் மக்களாய்ப் பிறந்து வளர்ந்தனர். தேர்ப்பாகன் வளர்த்த மகன் அரண்மனைக்கு அடிக்கடி சென்று வந்ததினால் துரியோதனனுக்கும் அவனுக்கும் உயிர்த்தோழமை