பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
324
அறத்தின் குரல்
 

ஏற்பட்டது. துரியோதனன் பெரியவனாகி முடிசூட்டிக் கொண்டபோது தன் நண்பனான தேர்ப்பாகன் மகனையும் அங்க நாட்டிற்கு அரசனாக முடிசூட்டிச் சிறப்புச் செய்தான். அன்றும் இன்றும் துரியோதனாதியர்க்கு வலது கை போல விளங்கி வரும் அந்தத் தேர்ப்பாகனின் வளர்ப்பு மகனான ‘கர்ணன்’ யார் தெரியுமா? உனக்கும் கதிரவனுக்கும் பிறந்து நீ பெட்டியில் வைத்து ஆற்றில் மிதக்கவிட்ட அந்தப் பழைய குழந்தைதான்! உனக்கும் உன் மகனான கர்ணனுக்கும் உலகம் முழுவதற்கும் இதுவரை தெரியாத இந்த உறவின் இரகசியத்தை இப்போது நானே உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியத்தைச் சந்தர்ப்பம் உண்டாக்கி விட்டது.”

குந்தியின் கண்கள் வியப்பால் அகன்று மலர்ந்தன. புருவங்கள் மேற்புறமாக வளைந்து நிமிர்ந்து நெற்றி விளிம்பைத் தொட்டன. “ஆ! அப்படியா? கர்ணன் என் மூத்தமகனா?” -மெல்ல மெல்ல அவள் வாயிதழ்களிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன. அவள் மனவெளியில் பிள்ளைப் பாசம் என்ற இனிய தென்றல் சுகமாக வீசுவது போலிருந்தது. கண்ணன் தன் பேச்சை மேலும் தொடர்ந்தான்.

“குந்தீ! உனக்கு ஏற்படுகிற ஆச்சரியத்தில் தொடர்ந்து நான் கூறப்போகிற காரியத்தை மறந்து விடாதே. நான் இதுவரை கூறியன எல்லாம் இனிமேல் கூறப்போகின்றவற்றுக்கு முன்னுரையே தவிர வேறில்லை. இனிமேல் கூறப்போவதுதான் முக்கியமானது.”

“கூறுங்கள்! கேட்கிறேன்.”

“என் வேண்டுகோளின்படி இப்போது நீ கர்ணனிடம் போய் வர வேண்டும். அவனிடம் சென்று நீதான் அவனுக்குத் தாய் என்ற ரகசியத்தைச் சொல், ‘பாண்டவர்கள் உன் தம்பியர்கள், நீ இனிமேல் துரியோதனாதியர்களோடு இருப்பது முறையல்ல; பாண்டவர்களோடு சேர்ந்துவிடு!’ -என்று அழைத்துப் பார். அநேகமாகக் கர்ணன் அதற்கு இணங்க மாட்டான். காண்டவ தகனத்தின் போது