பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
325
 

 அர்ச்சுனனைப் பகைத்துக் கொண்டு சென்ற பாம்பு ஒன்று கர்ணனிடம் வளர்ந்து வருகிறது. அந்தப் பாம்பை அஸ்திரமாக்கிக் கர்ணன், அர்ச்சுனனைக் கொல்ல எண்ணியிருக்கிறான். நீ கர்ணனிடம், ‘நாகாஸ்திரத்தை ஒரு முறைக்குமேல் அர்ச்சுனனை நோக்கி எய்யக் கூடாது’ என்று ஒருவரம் வாங்கிக் கொண்டு திரும்பிவிடு!”

“கண்ணா! முன்பே பல நாட்களுக்கு முன்னால் நீ இந்த உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாதா? அப்போதே அவனைப் பாண்டவர்கள் பக்கம் சேர்த்திருப்பேனே நான்? இப்போது போர் ஏற்பட இருக்கின்ற இந்த நிலையில் திடீரென்று அவனைத் துரியோதனாதியர்களை விட்டு நன்றி மறந்து வரச் சொன்னால் அவன் இணங்குவானா? நீ வரம் கேட்டுக் கொண்டு வரச்சொல்வதைப் பார்த்தால் போரில் கர்ணன் அர்ச்சுனன் கையால் இறக்க வேண்டும் என்றல்லவா தெரிகிறது. இவ்வளவு நாட்களுக்குப் பின் மகனைக் காணச் சென்று அவன் இறப்பதற்குக் காரணமான ஒரு வரத்தை நானே அவனிடம் கேட்க வேண்டும் என்றா சொல்கிறாய்?”

“ஆமாம்! குந்தீ! வேறு வழியே இல்லை. கேட்டுத்தான் ஆக வேண்டும். ஒரு கர்ணனுடைய உயிர் போகாவிட்டால் உன் மக்கள் ஐந்து பேருடைய உயிரையும் அவன் போக்கி விடுவான். உன் மக்கள் ஐந்துபேர் வாழ வேண்டுமானால் வெற்றிப் பெற வேண்டுமானால், நீ கர்ணனிடம் போய் இந்த வரத்தைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். நான் சொல்வதைச் சொல்லியாயிற்று. இனி உன் கடமையை நீ செய்ய வேண்டியது தான்” -இவ்வாறு கூறிவிட்டுக் கண்ணன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு விதுரன் மாளிகைக்குச் சென்றான். கண்ணன் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றி விடுவதென்ற முடிவுக்கே குந்தியும் வந்து சேர்ந்தாள்.

இங்கு நிகழ்ச்சிகள் இவ்வாறிருக்க அங்கே அரண்மனையில் துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும்