பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

அறத்தின் குரல்

தூதுவனாக வந்திருக்கும் கண்ணனைத் திரும்பிப் போகவிடாமல் அத்தினாபுரத்திலேயே கொலை செய்து விடுவதற்கான சூழ்ச்சிகளில் இறங்கியிருந்தனர். இந்தச் சூழ்ச்சிக்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காகத் தனது மந்திராலோசனைச் சபையைக் கூட்டியிருந்தான் துரியோதனன். திருதராட்டிரன், கர்ணன் மற்ற அமைச்சர்கள், துரியோதனனுடைய சகோதரர்கள் ஆகியோர் இந்த ஆலோசனையில் அங்கம் வகித்தனர். “பாண்டவர்கள் இவ்வளவு காலம் கானகத்தில் வசித்து விட்டு வந்த பிறகு இப்போது திடீரென்று நாடு கேட்கத் தூண்டிவிட்டவன் யார் தெரியுமா? எல்லாம் இந்த இடைப்பயலான கண்ணனின் வேலைதான். அவன் இன்னும் இங்கேதான் நம் தலைநகரில் திரிந்து கொண்டிருக்கிறான். அவனைச் சரியானபடி தண்டித்து விட வேண்டும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று சபையோரை நோக்கிக் கேட்டான் துரியோதனன், மகன் கூறியவற்றைக் கேட்ட குருடனாகிய திருதராட்டிரன் அதை ஆதரித்தே தானும் பேசினான்.

“வேறென்ன செய்வது? அந்தக் கண்ணன் இந்த ஊரை விட்டு வெளியேறுவதற்குள் வளைத்துக் கொண்டு ஆளைக் கொன்று தீர்த்து விட வேண்டியதுதான்.” திருதராட்டிரன் இவ்வாறு கூறவும் துரியோதனாதியர்களுக்குள்ளேயே நற் பண்பு உடையவனும் இளைஞனுமாகிய விகருணன் என்பவன் “பெரியோர்களாகிய நீங்கள் ‘தூதுவனை கொல்லக் கூடாது’ -என்ற அறவுரையையும் மறந்து இப்படி வஞ்சகத்திட்டத்தில் இறங்கலாமா? நம்முடைய தலைநகரைத் தேடி வந்தவர்களை நாம் கொல்வது தர்மமாகுமா? கண்ணன் மாமாயன். நீங்கள் கோடிக் கணக்கில் ஒன்று கூடி வளைத்துக் கொண்டாலும் அவனை நெருங்க முடியாது. கண்ணன் என்ற அந்த இடையனுக்குள் உள்ள சக்தியை அறிந்து கொள்ளாமல் துன்புறாதீர்கள்” -என்றான். இதைக் கேட்டதும் விகருணனுக்கு நேர்மாறான பண்புள்ளவனான துச்சாதனன் சினம் கொண்டு விட்டான்.