பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/33

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
31
 

மனைவியாகக் கருதித் தூதுவர்களை மணம் பேசி வருமாறு அனுப்பினான். திருதராட்டிரன் கண்ணில்லாதவன் என்ற உண்மை தெரிந்தவனாகையினால் காந்தார வேந்தன் அவனுக்குத் தன் மகளைக் கொடுப்பதற்குத் தயங்கினான். தன் தயக்கத்தை அவன் தன் மகளிடமே கூறியபோது, “கலங்காதீர்கள் அப்பா? விதி என்னை இந்த வழியில் தான் அழைக்கிறது போலும்! குருடராக இருந்தால் இருக்கட்டும்! நான் அவரையே மணந்து கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்!” என்று காந்தாரி மறுமொழி தந்தாள். ‘மணத்திற்குச் சம்மதம்’ என்று தூதுவர்களிடம் கூறியனுப்பினான், காந்தாரமன்னன். விரைவில் காந்தாரிக்கும் திருதராட்டிரனுக்கும் மணம் முடிந்தது. ‘கணவனுக்கு இல்லாத கண்கள்’ எனக்கு மட்டும் எதற்கு? என்று கூறினவளாய் மணமான அன்றே தன் கண்களையும் திரையிட்டு இறுகக் கட்டி மறைத்துக் கொண்டாள் காந்தாரி. அவளுடைய இந்தக் கற்புத் திறத்தைக் கண்டு வியக்காதாரில்லை. அதியற்புதமான அழகும் நற்குணங்களும் படைத்த இந்த யுவதிக்கு இவ்வளவு இளம் பருவத்திலேயே தியாகமும், கற்புணர்ச்சியும் செறிந்த இந்த உள்ளம் எப்படி அமைந்தது?’ - என்று நாடு முழுவதும் அதிசயித்தது! சாதாரணமாக எவராலும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்து காட்டுகின்றவரிடம் ஒரு விதமான தெய்வீகக் கவர்ச்சி இயற்கையாகவே ஏற்படுகின்றது. காந்தாரியின் தியாகமும் அவளுக்கு இத்தகையதொரு கவர்ச்சியை அளித்திருந்தது. திருதராட்டிரனுக்குத் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாண்டுவின் திருமணத்தைப் பற்றிய சிந்தனை வீட்டுமனுக்கு ஏற்பட்டது. குந்திபோசமரபில் சூரன் என்னும் அரசனின் மகளாகிய ‘பிரதை’ (குந்தி ) என்பவளைப் பாண்டுவுக்கு மணமுடிக்கலாமென்று கருதினான் அவன். அதற்கு முன்பாகவே ‘பிரதை’யின் கன்னிப் பருவத்து வரலாறு ஒன்றை நாம் கண்டு விடுவோம். கதைப் போக்கிற்கு அவசியமான வரலாறு ஆகும் இது.