பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
330
அறத்தின் குரல்
 

முன்னால் நின்றான். துரியோதனன் தன் சூழ்ச்சி பலியாமல் போனதைக் கண்டு மிரண்டு போனான். அப்படி யிருந்தும் தன் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நடித்தான். சிரித்துக் கொண்டு நின்ற கண்ணனைக் கோபத்தோடு உறுத்துப் பார்த்தான்.

“ஏ! முட்டாள் மன்னனே! நெருப்போடு நீ விளையாடலாமா? கெட்ட எண்ணத்தோடு என்னைக் கொல்வதற்காக நீ குழி வெட்டியிருந்தாய்! இதே குழிக்குள் உன்னையும் உன் குலத்தையும் உன்னைச் சேர்ந்த சர்வத்தையும் ஆழப் புதைத்து நாசம் செய்ய முடியும் என்னால், அப்படியிருந்தும் எதற்காக இப்போது உங்களைக் கொல்லாமல் விடுகிறேன் தெரியுமா? உங்கள் யாவரையும் கொன்று உங்கள் குலத்தை வேரறுப்பதாகப் பாண்டவர்கள் சபதம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சபதம் நிறைவேறாமல் போய்விடக் கூடாதே என்று தான் உங்களை இப்போது உயிருடன் விடுகிறேன். தவிர, ‘உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையே உள்ள பகை காரணமாகப் போர் ஏற்பட்டால் பாண்டவர்கள் சார்பாக ஆயுதமெடுத்து உன்னுடன் போர் புரிவதில்லை’ என்று முன்பே உனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த அவையிலிருந்து வெளியேறினான் கண்ணன். அப்படி வெளியேறும் போது கர்ணனை மட்டும் சைகை காட்டி அழைத்துச் சிறிது தொலைவு தன்னோடு கூட்டிக் கொண்டு சென்றான். கர்ணனுடைய அப்போதைய மனநிலையில் அவன் கண்ணனுடன் போயிருக்கமாட்டான். ஆனால் அவனை யறியாமலேயே ஒரு சக்தி அவனைக் கண்ணனோடு இழுத்துக் கொண்டு போயிற்று. ஒரு தனியிடத்துக்கு வந்ததும் கண்ணன் கர்ணனை நோக்கிக் கூறலானான்:-

“கர்ணா! இப்போது நான் கூறப்போகிற செய்தியைக் கேட்டு நீ திடுக்கிடாதே. நீ குந்திக்குப் பிறந்த முதல் மகன். பாண்டவர்கள் ஐந்து பேரும் உனக்குத் தம்பிமார்கள். துருவாச முனிவர் உன் தாய்க்குக் கொடுத்த வரத்தால் முதல்