பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

333


துரியோதனன். தன் சூழ்ச்சி இனிது நிறைவேறியதை உணர்ந்து கொண்ட கண்ணன், “சரி அசுவத்தாமா! நீ போய் வா! என் வேண்டுகோளுக்கு இணங்க உனக்கு விருப்பமில்லை போலும். இதற்கு மேல் நான் வற்புறுத்த மாட்டேன்” என்று கூறிக் கொண்டே அசுவத்தாமனுக்கு விடை கொடுத்து விட்டுத் தானும் கிளம்பினான். கிளம்பியவன் அங்கிருந்து நேரே விதுரன் மாளிகைக்குச் சென்றான். விதுரன் மாளிகையில் தனியிடம் ஒன்றிலமர்ந்து இந்திரனை எண்ணினான். இந்திரனிடம் அப்போது அவனுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தது. முன்னவனே முன்னின்று சிந்தித்தால் முடியாத காரியமும் உண்டா? கண்ணன் எண்ணிய சிறிது நேரத்திற்கெல்லாம் இந்திரன் அவன் முன் தோன்றி வணங்கினான். கண்ணன் அவனை வரவேற்று அருகில் அமரச் செய்து நலம் விசாரித்த பின் தான் கூறவேண்டிய காரியத்தைக் கூறலானான். “உன் மகன் அர்ச்சுனன் நிகழவிருக்கும் போரில் வெற்றி பெற்று உயிர் பிழைப்பதற்காக இப்போது நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்! கர்ணனிடம் அவன் பிறக்கும்போதே தோன்றிய கவசகுண்டலங்கள் இரண்டு உள்ளன. அந்தக் கவசகுண்டலங்கள் அவனிடத்தில் உள்ளவரை அவனை எவராலும் தோல்வியுறச் செய்ய இயலாது. மேலும் காண்டவவனத்திலிருந்து தப்பிய பாம்பு ஒன்று போரில் அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே கர்ணனிடம் வளர்ந்து வருகின்றது. இந்த அபாயங்களை எல்லாம் கடந்து அர்ச்சுனன் உயிர் பிழைக்க வேண்டுமானால் நீ ஒன்று செய்ய வேண்டும். வேதியனைப் போல மாறுவேடம் பூண்டு கர்ணனிடம் சென்று எப்படியாவது அவனுடைய கவசகுண்டலங்களைத் தானமாக வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். இந்தக் கவச குண்டலங்கள் கர்ணனிடமிருந்து பிரிக்கப்படவில்லையானால் போரில் அர்ச்சுனனால் கர்ணனை வெல்லவே முடியாது” - என்று அர்ச்சுனனின் தந்தை முறை உடையவனான இந்திரனை வேண்டிக் கொண்டான் கண்ணன்.