பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
334
அறத்தின் குரல்
 


இந்திரன் கண்ணனின் வேண்டுகோளின்படி, வேத மோதுகின்ற முதுபெருங் கிழவனாகிக் கர்ணனுடைய மாளிகையை அடைந்தான். எப்போது எவர் வந்து எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கக் கூடியவனான கர்ணன் இந்த முதுபெருங்கிழவனை வரவேற்று உபசரித்தான். “பெரியவரே, உமக்கு எது வேண்டுமானாலும் கேளும்! தருகிறேன்.”

“நிச்சயமாக நான் எதைக் கேட்டாலும் நீ கொடுப்பாயா?”

“சந்தேகமே வேண்டாம்! கண்டிப்பாகக் கொடுக்கிறேன்.”

“அப்படியானால் உன் செவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அந்தக் குண்டலங்கள் இரண்டையும் கழற்றி எனக்குக் கொடு! இன்னும் நீ பிறக்கும் போதே உடன்பிறந்த கவசங்களையும் கொடு!”

கர்ணன் திகைத்தான்! என்ன செய்வது? வாக்குக் கொடுத்தபின் மறுக்கவா முடியும்? கிழவருக்குக் கொடுப்பதற்காகக் குண்டலங்களையும் கவசங்களையும் கழற்றத் தொடங்கினான். “கர்ணா! கழற்றாதே. இதில் சூழ்ச்சி நிறைந்திருக்கிறது. இவற்றைக் கழற்றிக் கொடுப்பதனால் உனக்கு நீயே அழிவைத் தேடிக் கொள்கிறாய்” -வானிலிருந்து கதிரவன் எழுப்பிய மேற்படி எச்சரிக்கைக் குரல் அசரீரியாகக் கர்ணன் செவிகளில் கேட்டன. ஆனால் கர்ணன் இவற்றைப் பொருட்படுத்தவில்லை. தன் வாக்குத் தவறக்கூடாது என்பதற்காகக் கூறியபடியே குண்டலங்களையும் கவசங்களையும் கிழவனாரிடம் கொடுத்து விட்டான். கொடுக்கக்கூடாதவை எவையோ அவற்றையே கொடுத்துப் பெருமை கொண்ட அந்தக் கொடையாளியின் தியாகம் சகலபுவனங்களிலும் ஓர் வியப்பை உண்டாக்கியது. போலிக் கிழவனாக உருமாறி வந்திருந்த இந்திரன், உடனே தன் சுய உருவில் கர்ணனுக்கு முன் தோற்றமளித்து அவனது