பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

335

செயற்கரிய கொடைத் திறனைப் பாராட்டி வாழ்த்தினான். தனது பாராட்டுக்கு ஓர் அடையாளமாகச் சிறப்பும் வலிமையும் வாய்ந்த வேலாயுதம் ஒன்றைக் கர்ணனுக்குப் பரிசளித்து, “கர்ணா! குருக்ஷேத்திரப் போரில் கடோற்கசனோடு போர் செய்ய நேரிடுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த வேல் உனக்குப் பெரிதும் பயன்படும்” -என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான் இந்திரன். தனது எண்ணப்படியே கர்ணனது கவச குண்டலங்கள் பறிக்கப்பட்டதை அறிந்து உவந்தான் கண்ணன். இந்திரன் கண்ணனைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினான்.

“இந்திரா! இந்தக் கர்ணன் இருக்கிறானே; இவன் கொடை என்ற மகாவேள்விக்காகவே அவதரித்தவன், கவசகுண்டலங்களை இழந்த பின்பு, தான் தோல்வி அடைவது உறுதி -என்று தெரிந்து கொண்டே உனக்காக அவற்றைத் தியாகம் செய்திருக்கிறான் பார்த்தாயா? சாதாரண மக்கள் வெறும் பொருளைத்தானம் செய்யவே பயப்படுகின்றார்கள். பெரியோர்களோ, உயிரையும் அந்த உயிரைவிட உயர்ந்த பொருள்களையும் கூடத் தியாகம் செய்துவிடுகிறார்கள்” என்று மாயவனாகிய கண்ணபிரான் கர்ணனைப் பாராட்டினார். தன் மகன் அர்ச்சுனனுக்குப் போரில் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடிந்ததே என்ற மனநிறைவோடு இந்திரன் விடைபெற்றுக் கொண்டு சென்றான்.

இந்திரன் சென்ற பின்னர் மீண்டும் குந்தியைப் போய்ச் சந்தித்து, தான் கூறிய காரியத்தை விரைவில் முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டான் கண்ணன். அத்தினாபுரியில் அவனுக்கு எஞ்சியிருந்த கடைசி வேலை குந்தியின் மூலம் கர்ணன் மனத்தைக் கலைத்துப் பாண்டவர்கள் பக்கம் சேர்க்க முயல்வதே! அது முடிந்தால் அப்புறம் ஊருக்குப் புறப்பட வேண்டியது தான்.