பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
337
 

மனத்தில் சில சந்தேகங்கள் குறுக்கிடுகின்றன. அவற்றை நீக்கித் தெளிவு பெற வேண்டுவது அவசியமே. முன்பே பல பல பெண்கள் எனது செல்வத்திலும் செல்வாக்கிலும் பெருமையிலும் பங்கு கொள்ள ஆசைப்பட்டு என் தாய் என்று பொய் உறவு கொண்டாடி வந்தனர். பேய் போன்ற தீய இயல்பும் தீய எண்ணங்களும் படைத்த அந்தப் பெண்களைச் சரியானபடி சோதித்துத் தண்டித்தேன். மாயத்தன்மை பொருந்தியதும் தேவர்களால் எனக்குப் பரிசளிக்கப் பட்டதுமான ஒரு ஆடை என்னிடமிருக்கிறது. என்னை மெய்யாகவே பெற்ற தாயைத் தவிர வேறு யார் அணிந்து கொண்டாலும் அந்த ஆடை அவர்களை எரித்துவிடும். இதற்கு முன் என்னைத் தேடி வந்த போலித் தாய்களும் அப்படியே அழிந்து போய்விட்டனர். தாங்கள் என்னுடைய உண்மைத் தாயாயிருக்கும் பட்சத்தில் அந்த ஆடை தங்களை ஒன்றும் செய்யாது, இதோ அந்த ஆடையை இப்போது கொண்டு வருகிறேன்” என்று கூறிக்கொண்டே கர்ணன் உள்ளே சென்று அந்த அற்புத ஆடையை எடுத்துக் கொண்டு வந்து குந்தியிடம் கொடுத்தான்.

கர்ணன் கூறியபடி அந்த ஆடையை விரித்துத் தன் உடல் மறையப் போர்த்திக்கொண்டாள் குந்தி. நாழிகை விநாடி விநாடியாக வளர்ந்தது. மேலே போர்த்தப்பட்ட அந்த ஆடை குந்தியை ஒன்றும் செய்யவில்லை. பொலிவாக விளங்குகிற ஆடையைப் போர்த்திக் கொண்ட சிறப்பான தோற்றத்துடனே புன்முறுவல் தவழ மகனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் குந்தி.

“அம்மா! இனிமேல் சந்தேகமே இல்லை நீங்கள் தான் என்னைப் பெற்ற தாய். நான் உங்கள் புதல்வன்” என்று அன்பு ததும்பக் கூறிக் கொண்டே அவள் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான் கர்ணன். குந்தி, மகனைத் தன் கைகளால் எடுத்துத் தூக்கி நிறுத்தி உச்சி மோந்து தழுவிக் கொண்டாள். “கர்ணா! மகனே; நான் உன்னைப் பெற்ற பின் உன் முகத்திலேயே விழிக்க முடியாத பாவியாகிவிட்டேன்.


அ.கு. -22