பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை

குந்தி போசர் அரண்மனையில் எழிலும் வனப்புமாக வளர்ந்துவந்த பிரதை, வளர்பிறைச் சந்திரன் கலை கலையாக வளர்ந்து முழுமை கனிவது போல நிறைவை நெருங்கிக் கொண்டி ருந்தாள். துள்ளித் திரிந்து ஓடியாடி விளையாடும்இளமைப் பருவத்தில் இளமயில் போலப் பழகி வந்தாள் அவள். இந்த நிலையில் தவ வலிமை மிக்கவராகிய துர்வாச முனிவர் ஒருமுறை குந்திபோசர் அரண்மனைக்கு விஜயம் செய்து தங்கியிருந்தார். முனிவர் வரவால் தன் விளையாடல்களையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு முழு நேரத்தையும் அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபடுத்தினாள் பிரதை.

“இவர் இங்கே தங்கியிருக்கின்ற வரையிலும் இவருக்குரிய பணிவிடைகள் எல்லாவற்றையும் நீயே செய்ய வேண்டும்! முனிவர் பணிவிடையினால் உனக்குப் பல நன்மைகள் எய்தும்” என்று அவள் தந்தையும் அவளுக்குக் கட்டளையிட்டிருந்தான். பிரதை, கழங்காடல், பந்தாடல், அம்மானையாடல், மலர் கொய்தல் முதலிய எல்லா விளையாட்டுக்களையும் மறந்து முனிவர் பணியில் மூழ்கினாள். எதற்கெடுத்தாலும் விரைவில் சினங்கொண்டு விடுபவராகிய துருவாசரும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு சினமின்றி இருக்குமாறு ஓராண்டுக் காலம் அலுக்காமல் சலிக்காமல் இந்தப் பணிவிடையைப் பொறுமையோடு தொடர்ந்து செய்தாள் பிரதை. ஆத்திரத்தின் அவதாரமாகிய துர்வாச முனிவரே கண்டு வியந்து மகிழும்படி அவ்வளவு பயபக்தியோடு அந்த ஓராண்டுப் பணியை நிறைவேற்றி யிருந்தாள் அவள். ஓராண்டு கழிந்ததும் மனமகிழ்ந்த துருவாசர் தபோவனத்திற்குத் திரும்பி செல்லுமுன் அவளுக்குச் சிறந்ததொரு வரத்தை அளித்துவிட்டுச் சென்றார். அந்த வரத்தை அவள் அடைவதற்குரிய மந்திரத்தையும்