பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
340
அறத்தின் குரல்
 


“நீ உன் சகோதரர்கள் ஐவரில் அர்ச்சுனன் ஒருவனை மட்டும்தான் எதிர்த்துப் போர் புரிய வேண்டும், மற்ற நால்வரோடும் போர் புரியக் கூடாது.”

“சரி அப்படியே!..”

“இன்னும் ஒரு வேண்டுகோள். அர்ச்சுனனைப் பழிவாங்குவதற்கென்றே உன்னிடம் வளர்ந்து வரும் நாகாஸ்திரத்தை ஒரே ஒரு முறைக்கு மேல் நீ அவன் மேல் எய்யக் கூடாது.” கர்ணன் இந்த இரண்டாவது வேண்டுகோளைக் கேட்டதும் சிறிது தயங்கினான். ‘வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். தருகிறேன்’ என்று தாய்க்குக் கொடுத்த வாக்கு நினைவிற்கு வந்து, “சரி அம்மா! நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் தொடுக்க மாட்டேன். உங்கள் வேண்டுகோள்கள் இரண்டையும் நான் ஒப்புக் கொண்டு அவற்றின் படியே நடக்கிறேன்.”

“மகனே! நல்லது. நீ என்னிடம் கேட்க வேண்டிய வேண்டுகோள் ஏதேனும் இருந்தால் கேளேன்.”

“ஆமாம் அம்மா! நானும் சில வேண்டுகோள்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் அவற்றை மறுக்க மாட்டீர்கள் அல்லவா?”

“உன்னைப் பெற்ற தாயாக வாய்த்ததே பெரும் பேறு. உன் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வதைவிடச் சிறந்த பாக்கியம் எனக்கு வேறென்ன இருக்கிறது?”

“விதியின் வலிமை நம்முடைய வலிமைகளை எல்லாம் காட்டிலும் மிகப் பெரியது அம்மா! குருக்ஷேத்திரப் போரில் நான் அர்ச்சுனனுடைய வில்லால் கொல்லப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. நான் இறந்த பிறகு என் சடலத்தை அனாதரவாக விட்டுவிடாதீர்கள். என்னுடைய வலிமைக்குக் காரணமானவற்றையெல்லாம் உங்கள் வேண்டுகோள்களால் கட்டிப் போட்டுவிட்டீர்கள். என் சடலத்திற்குச் செய்யப் பெற வேண்டிய நீர்க்