பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

341

கடன்களையும் தீக்கடன்களையுமாவது முறையாக என் தம்பிமார்களைக் கொண்டு செய்யுங்கள். போர்க்களத்தில் கூடியிருக்கும் மணிமுடி தரித்த மன்னர்கள் “கர்ணனை இறுதிக் கடன் செய்து எரிப்பதற்குக் கூட ஆள் இல்லை” என்று இழிவாகப் பேசும்படி விட்டுவிடாதீர்கள். இன்னொன்றும் வேண்டிக்கொள்கிறேன். நான் இறந்த பின்பாவது ‘எனக்கு நீங்கள் தாய். உங்களுக்கு நான் மகன்’ என்ற உறவு முறையை உலகறிய ஒப்புக் கொண்டு பரவச் செய்யுங்கள். என் சடலத்துக்காவது பாலூட்டி அந்த உறவு முறையை வெளிப்படுத்துங்கள். ‘பெற்றவள் யார்? பெற்றவன் யார். உடன் பிறந்தோர் யார்? ஒன்றுமே தெரியாத அனாதைப் பயலல்லவா கர்ணண்! என்ற பழிச்சொல் நான் மறைந்த பிறகாவது நீங்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். செய்வீர்களல்லவா?”

“கட்டாயம் செய்கிறேன் மகனே! உன்னுடைய இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதால் உனக்கு மட்டுமா பெருமை? எனக்குத்தானே பெருமை?” -என்று குந்தி அவன் வேண்டுகோளுக்கு இணங்கி உறுதிமொழி கொடுத்தாள். பின்பு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தாள். அவளைத் தன்னிடமிருந்து அனுப்ப மனமில்லாமல்தான் விடை கொடுத்தனுப்பினான் கர்ணனும். அங்கு விடை பெற்றுச் சென்ற குந்தி, நேரே கண்ணனிடம் சென்றாள். நடந்தவற்றை எல்லாம் கூறுமாறு கண்ணன் கேட்டான். குந்தி கர்ணனைத் தான் சந்தித்தது முதல் தனக்கும் அவனுக்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறினாள்.

“குந்தி! இந்த நிகழ்ச்சிகள் இப்போதைக்கு உன்னையும் என்னையும் கர்ணனையும் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டாம். இரகசியமாகவே இருக்கட்டும்” என்று குந்தியிடம் வேண்டிக் கொண்ட கண்ணபிரான் தான் அத்தினாபுரியிலிருந்து திரும்புவதாக அவளிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான். கண்ணன் அங்கிருந்து புறப்படும்போது