பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
343
 

அழைத்துக் கொண்டு வந்திருந்தான். தமிழ்நாட்டு மூவேந்தர்கள் வந்திருந்தார்கள். உலகில் பாண்டவர்கள் பக்கமே உண்மையும் அறமும் ஓங்கி நிற்கின்றன என்பதை உணர்ந்து கொண்டிருந்த எல்லா அரசர்களும் வந்திருந்தனர். முடி சூடிய மன்னர்களும், வாலைப்பருவத்து இளவரசர்களும், படை நடத்தும் தலைவர்களும், அரசு நெறி செலுத்தும் அமைச்சர்களும், உற்சாகத்தோடு பாண்டவர்களுக்கு உதவிபுரிய வந்து காத்திருந்தனர். சீனர், தெலுங்கர், மாளவர், கலிங்கர், கன்னடர், மகாதர் என்று அடுக்கிக் கொண்டிருப்பதை விடத் தருமத்தின் மேல் நம்பிக்கை யுள்ளவர்கள், தருமத்தைத் தோற்க விடக் கூடாது என்று உறுதியுள்ளவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள் எனச் சுருக்கமாகக் கூறி முடித்து விடலாம்.

தங்களுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக வந்திருக்கும் அவர்களை அன்பு ததும்பும் மனத்தோடு வரவேற்றுத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர் பாண்டவர். கண்ணன் உடனிருந்தான். அத்தினாபுரிக்குத் தூது சென்றிருந்தபோது அங்கு நடந்தவற்றை வந்திருந்த மன்னர்கள் எல்லோரும் கண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். “நண்பர்களே! தர்மயுத்தமாக நடக்க இருக்கின்ற இந்தப் போரில் படைப் பலத்தைவிட ஆத்மாவின் பலத்தையே நான் பெரிதாகக் கருதுகின்றேன். உங்கள் எல்லோருடைய நல்ல மனத்தாலும் உதவியாலும் தான் என் ஆன்ம பலம் வெற்றி அடைய வேண்டும். எனது இந்த நம்பிக்கையை நிறைவேற்றிவைப்பது உங்கள் பொறுப்பு!” என்று தருமன் வந்திருந்த அரசர்களை நோக்கி மனமுருக வேண்டிக் கொண்டான்.

தருமனின் வேண்டுகோளால் மனமிரங்கிய மன்னர்கள், “பாண்டவர்களுக்கு உதவுவதில் பெருமைப்பட வேண்டியவர்கள் நாங்கள், இந்த உயிரும் இந்தப் பிறவியும் பாண்டவர்களுக்கு உதவுவதற்காக அழியுமானால் அது எங்கள் பேறு ஆகும். அந்தப் பெரும்பேற்றை இழக்க எங்கும்,