பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

அறத்தின் குரல்

எதிர்க்க மாட்டான் உன் வேண்டுகோளின் படியே தன்னைக் களப்பலியாகக் கொடுப்பதற்கும் இணங்கி விடுவான். நீ சகாதேவனையும், அரவானையும் சந்தித்து இந்த இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டு வா! இப்போதைக்கு இது நமக்குப் பயனளிக்கக் கூடிய திட்டமாகும்” -என்று வீட்டுமன் கூறிய திட்டத்தில் தனக்கு நிறைய நன்மை இருப்பதை உணர்ந்த துரியோதனன் அப்படியே செய்யச் சம்மதித்துச் சகாதேவனையும் அரவானையும் காண்பதற்குப் புறப்பட்டான்.

சாதாரணமாக வேறு சமயமாயிருந்தால் அவன் தன்னை விட நிலையில் தாழ்ந்தவனாகிய சகாதேவனை அணுகுவதற்கு விரும்பியிருக்க மாட்டான், செயலில் தான் அடைகின்ற சாதகம் அதிகமாக இருப்பதனால் சகாதேவனையும் அரவானையும் வலுவில் சந்திக்கக் கிளம்பி விட்டான். துரியோதனன் தன்னைத் தேடி வரக் கண்ட சகாதேவன் பகைமையை மறந்து வாருங்கள் அண்ணா! இந்தப் பகைமை நிறைந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் என்னைத் தேடி வந்திருப்பது எனக்கு வியப்பையே அளிக்கிறது வந்த காரியம் என்னவோ?” என்று வரவேற்று விசாரித்தான்.

“தம்பீ! பகைமையைப் பாராட்டாமல் நான் வந்த காரியத்தை முடித்துக் கொடுப்பாய் என்று நினைக்கிறேன். நல்ல நிமித்தங்களையும் வேளைகளையும் அறிந்து கூறுவதில் நீயே திறமை மிக்கவன். களப்பலி கொடுப்பதற்கு ஏற்ற நல்ல நேரத்தை ஆராய்ந்து எனக்குச் சொல்ல வேண்டும். சொல்லுவாயா?” -இவ்வாறு துரியோதனன் கேட்கவும் சகாதேவன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான்.

பின்பு துரியோதனனை நோக்கி “அண்ணா ! நல்லவேளையைச் சொல்கிறேன். கேளுங்கள். சூரியனும் சந்திரனும் செயலொழிந்து தங்களுக்குள் ஒன்று சேருகின்ற நேரம் அமாவாசை இரவே, அந்த நேரம்தான் களப்பலிக்கு ஏற்றது” என்றான். நல்லவேளையைத் தெரிந்து கொண்டு