பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/355

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
353
 

முன் சாமானியமான பொருள்!” -என்று கண்ணன் இவ்வாறு கூறவும் பாண்டவர்கள் வெலவெலத்துப் போனார்கள். அவர்கள் உடலும் உள்ளமும் ஒருங்கே நடுங்கின.

“கண்ணா! என்ன வார்த்தை கூறினாய்? உன்னைப் பலி கொடுத்துப் பெறப் போகிற வெற்றியை விட இப்போதே அடைகின்ற தோல்வி போதும் எங்களுக்கு. நீ இல்லாதபோது எங்களுக்குப் போர் எதற்கு? வெற்றி எதற்கு? அரசாளும் உரிமைதான் எதற்கு? எங்களைச் சோதிக்காதே! நாங்கள் இப்போதே போர் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறோம்” என்று கண்ணன் திருவடிகளில் விழுந்து கதறினான் தருமன். கண்ணன் தனது மாய நாடகத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

அவனது நாடகம் அவன் எதிர்பார்த்த பலனைக் கொடுத்தது. கண்ணனின் விழிகள் அரவானை ஊடுருவி நோக்கின. அரவானின் விழிகள் கண்ணீரால் நனைந்திருந்தன. அவன் கண்ணனையும் தருமனையும் நோக்கி, “இதோ நான் இருக்கிறேன். என்னைக் களப்பலி கொடுங்கள். களப் பலியாவதற்கென்று அன்றே என் தலையில் எழுதியிருக்கிறது. துரியோதனனுக்குக் களப்பலியாவதாக ஏமாந்து போய் நேற்றே வாக்குக் கொடுத்தேன். இன்றைக்கு நீங்கள் களப்பலி கொடுக்காவிட்டால் எப்படியும் நாளைக்கு அவன் என்னைக் களப்பலி கொடுத்து விடுவான். அமாவாசையன்று பலியாவதாக வாக்குக் கொடுத்தேன் அவனுக்கு இன்று தான் அமாவாசை. ஆனால் என்னைப் பலி கொடுக்க அவன் இன்னும் வரவில்லை. குறிப்பிட்ட நல்லவேளை தவறிவிடக் கூடாது. அவன் பலியாக்க வேண்டிய உடலை நீங்கள் பலியாக்கிக் கொள்ளுங்கள். அதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை” -என்று கூறினான்.

“எதற்கு அப்பா உனக்கு வீண் சிரமம்? பாண்டவர்களுக்காக நானே பலியாகி விடுகிறேன். நீ துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்று” -என்று கண்ணன் மீண்டும் போலிச் சோக நடிப்பு நடித்தான்.


அ.கு. -23