பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/356

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
354
அறத்தின் குரல்
 


“இல்லை! நீ போருக்கு உறுதுணைவனாக உயிருடன் இருந்து பாண்டவர்களுக்கு எல்லா உதவியும் செய்து வெற்றியை வாங்கிக் கொடு. பலியாக வேண்டிய பாக்கியம் எனக்கே இருக்கட்டும். அதோடு எனக்கு ஒரு வரத்தையும் கொடு! பலியாக வேண்டும் என்ற ஆசையோடு, மற்றோர்புறம், பாண்டவர்களும் கெளரவர்களும் செய்யும் இந்தப் போரை உயிரோடிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும் என் மனத்தில் அகலாமல் நிறைந்து நிற்கிறது. அதனால் இன்று இன்னும் சிறிது நேரத்தில் நான் களப்பலியாகி இறந்து போய் விட்டாலும் பின்பு போர் தொடங்கியதும், உயிர்பெற்றுச் சில காலம் போர்க்களக் காட்சிகளையும் காண்பதற்கு வேண்டிய வரத்தை எளியவனாகிய என் பொருட்டு நீ வழங்க வேண்டும்” -என்று அரவான் நீரொழுகும் கண்களோடு வேண்டினான். அரவானின் வேண்டுகோளுக்குக் கண்ணன் இணங்கினான். அதற்கு வேண்டிய வரத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டான். அரவான் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொண்டான்.

இரவு நேரம் வந்தது. அமாவாசை இருட்டு மைக்குழம்பெனக் கவிந்து உலகைக் கருமையில் மூழ்க அடித்திருந்தது. பாண்டவர்களின் ஜன்மபூமி குருநாடு அல்லவா? இரவோடிரவாக எவரும் அறியாமல் அரவானையும் அழைத்துக் கொண்டு தங்கள் ஜன்மபூமிக்குச் சென்றனர் பாண்டவர். தாங்கள் பரம்பரையாக வணங்கி வந்த காளி கோவிலுக்குச் சென்று நீராடிய ஈரம் உலராத ஆடையோடு அரவானைப் பலிபீடத்தில் நிறுத்தினர். களப்பலியாகப் போகிறவன் யாரோ அவன், தானே தன் கைவாளால் தன்னுடைய தலை முதலிய உறுப்புக்களை அறுத்து காளிதேவிக்கு முன் படைக்க வேண்டுமென்பது வழக்கம். பாண்டவர்கள் ஐவரும் கூப்பிய கரங்களுடன் தேவியைத் தியானிக்கிற பாவனையில் கண்களை இறுக மூடிக்கொண்டு மோனத்தில் இலயித்தனர். அரவான் மலர்ந்த