பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

355

முகத்தோடு இடைவாளை உருவிக் கையில் எடுத்துக் கொண்டான். மறுவிநாடி அவன் வலக்கை வாள் நுனியை அவனது கழுத்தை நோக்கியே கொண்டு போயிற்று. விநாடிகள் கழிந்தன. பலிபீடத்தில் பசுங் குருதி பாய்ந்து வழிந்து ஓடியிருந்தது. சிதறி அறுபட்டுக் கிடந்த அரவானின் உடலுறுப்புக்களுக்கிடையே வாளும் ஒரு மூலையிலே கிடந்தது. பாண்டவர்கள் ஈரம் கசியும் விழிகளின் துயரச் சுவடுகளைத் துடைத்துக் கொண்டே மேலே நிகழவேண்டிய தெய்வக் கடன்களைச் செய்தனர். ஐந்து பேரும் தனித்தனியே யானை, குதிரை முதலிய சில விலங்குகளையும் பலி கொடுத்தனர். குலதெய்வமான காளிதேவியை வெற்றி நல்குமாறு வேண்டிக் கொண்டு கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். ‘களப்பலி’ என்ற பெயரில் நிறைவேற வேண்டிய அந்தப் பயங்கரமான சடங்கு நிறைவேறிவிட்டது. படைகளை இருபுறமும் அணிவகுத்து, போர் தொடங்க வேண்டியதுதான் எஞ்சி நின்றது. மறுநாள் உதவியாக வந்திருந்த அரசர்களும் படைகளும் தங்கியிருந்த இடத்தில் பாண்டவர்களும் கண்ணனும் மற்ற மன்னர்களும் கூடிப் படைகளைப் பிரித்து அணிவகுப்பது பற்றிச் சிந்தித்தனர். பாண்டவர்கள், கெளரவர்கள் இருசாராரும் எதிர்த்துப் போர் செய்யத்தக்க போர்க்களமாகக் ‘குருட்சேத்திரம்’ என்ற மிகப்பெரிய வெளியைத் தேர்ந்தெடுத்திருந்தனர். தங்கியிருந்த இடத்திலிருந்து நால்வகைப் படைகளையும் போருக்கேற்ற முறையில் வரிசையாக அணிவகுத்துப் போர்களத்திற்கு அழைத்துக் கொண்டு போக வேண்டியிருந்தது. கண்ணன், பாண்டவர்கள் சார்பில் படைத்தலைவனாக நியமிக்கப்பட்டிருந்த சிவேதனைக் கூப்பிட்டுப் படைகளை அணிவகுத்துக் களத்திற்கு நடத்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான். தேர்ப்படையில் முன்னணி நின்று போரிடுகின்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ‘அதிர தாதிபர்கள்’ -என்று பெயர். புதிய படை வகுப்புத் திட்டத்தின்படி சிவேதன், வீமன், அர்ச்சுனன், அபிமன்யு